Politics
”இந்தியாவில் இருந்தால் இந்தி தெரிந்திருக்க வேண்டும்” - தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணை மிரட்டிய CISF அதிகாரி !
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து 'ஒரே நாடு ஒரே மொழி' என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது. இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
எப்படியாவது இந்தியைத் திணித்து விட வேண்டும் என பா.ஜ.க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் ஒன்றிய அரசு அதிகாரிகள் இந்தியில் பேசவேண்டும் என்றும், இந்தி பேசாதவர்கள் அதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பாஜக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்தால் இந்தி பேச வேண்டும் என தமிழ்நாட்டு பெண்ணை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் மிரட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியலாளப் பெண் ஒருவர் குழந்தையுடன் சென்னை வருவதற்காக கோவா விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இந்தியில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு தனக்கு "இந்தி தெரியாது. நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள்" என அந்த பெண் கூறியுள்ளார். உடனே பாதுகாப்பு வீரர் "இந்தியாவில் வாழ்ந்துக்கொண்டு இந்தி தெரியாதா? இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி.வேண்டுமானால் கூகுளில் தேடிப் பாருங்கள். தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. அப்படியென்றால் உங்களுக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்" என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இந்த சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தமிழ்நாடு முதல்வர் மு. க.ஸ்டாலினும் தனது X பக்கத்தில், "கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார்.இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்." என்று கூறியுள்ளார்.
அதே போல அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X பக்கத்தில், "கோவா விமான நிலையத்தில் மத்தியத் தொழிற்துறைப் பாதுகாப்பு வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், "இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா" என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல. பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!