Politics
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக MLA குற்றவாளி: 9 ஆண்டுகளுக்கு பிறகு வந்த தீர்ப்பு - உ.பியில் பரபர!
உத்தர பிரதேச மாநிலம், துத்தி (Duddhi) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ராம்துலார் கோந்த் (Ramdular Gond). இவர் கடந்த 2014-ம் ஆண்டு கிராமத்தில் வசித்த 15 வயது சிறுமி ஒருவரை கோந்த் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது குடும்பத்தாரிடம் தெரிவிக்கவே அவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அப்போது இவர் எம்.எல்.ஏ-வாக இல்லை. மாறாக இவரது மனைவி கிராம தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த சூழலில் இவரது பாலியல் வன்கொடுமை சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது அந்த பெண் மைனர் இல்லை என்றும், அவர் மேஜர் என்றும், அந்த பெண் 1994-ம் ஆண்டு பிறந்ததாகவும் கோந்த் தரப்பில் இருந்து போலியான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரனோ, அவர் சிறுமி என்று பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்தார். தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இறுதியாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் துத்தி தொகுதியில் போட்டியிட்டு கோந்த் வெற்றி பெற்றார்.
இதையடுத்து இந்த பாலியல் வழக்கு எம்.பி/ எம்.எல்.ஏ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள எம்பி-எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம், கோந்த் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் தற்போது உத்தர பிரதேசத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், பதவியில் இருக்கும் எம்.பி/ எம்.எல்.ஏ குற்றச்செயல்களில் ஈடுபட்டு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு குறைந்தது 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றாலே அவர்கள் பதவியை இழக்க நேரிடும். அதன்படி பார்த்தல், தற்போது குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் கோந்த் மீது போக்ஸோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போக்ஸோ வழக்கில் குறைந்தது குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். அந்த வகையில் கோந்திற்கு அவ்வாறு தண்டனை கிடைத்தால், அவர் தனது பதவியை இழக்க நேரிடும். எனினும் ராம்துலா கோந்தின் தண்டனை விவரம் குறித்து நீதிமன்றம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அறிவிக்கவுள்ளது. 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உ.பி பாஜக எம்.எல்.ஏ குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!