Politics

இத்தனை குற்றச்சாட்டுகளா ? இவரையா முதல்வராக அறிவித்துள்ளது பாஜக ? - காங்கிரஸ் கண்டனம் !

கடந்த நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வெவ்வேறு கட்டமாக நடைபெற்ற இந்த மாநிலங்களின் வாக்குப்பதிவுகள், இறுதியாக தெலங்கானா மாநிலத்தோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 3-ம் தேதி மிசோரத்தை தவிர 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 163 இடங்களை கைப்பெற்றி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இருப்பினும் அந்த மாநிலத்தில் முதலமைச்சர் தேர்வுக்கு தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. முதல்வர் பதவிக்கு ஏராளமானோர் போராடியதால் முதல்வர் அறிவிப்பு தொடர்ந்து தாமதமாகியது.

இறுதியாக கடந்த ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த மோகன் யாதவ் மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாஜக சார்பில் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து விரைவில் அவர் முதல்வராக பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதே நேரம் ஏராளமான குற்றச்சாட்டுகளில் சிக்கிய மோகன் யாதவ்வுக்கு முதல்வர் பதவி அறிவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதனை குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "தேர்தல் முடிவுகள் வெளியாகி 8 தினங்களுக்குப் பிறகு கடுமையான குற்றச்சாட்டுகளுக்குரிய ஒருவரை, பாஜக முதல்வராக அறிவித்திருக்கிறது. அவரது பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் இன்றும் இருக்கின்றன. அந்த வீடியோக்களில், மோகன் யாதவ் ஆபாசம், மிரட்டி, பதவியைத் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் பேசியுள்ளார்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் சிம்மஸ்தா விழாவுக்காகக் கொடுக்கப்பட்ட 872 ஏக்கர் நிலத்தைப் புறம்போக்கு நிலமாக மாற்றி, அபகரித்ததோடு, அதைக் குடியிருப்பாகவும் உருவாக்கியிருக்கிறார். அதை, அவரின் மனைவி மற்றும் சகோதரிகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டிலும் சிக்கியிருக்கிறார். அவரையா முதல்வராகத் தேர்வு செய்வது ? இதுதான் மத்தியப் பிரதேசத்துக்கு பாஜக-வும், பிரதமர் மோடியும் கொடுக்கும் உத்தரவாதமா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Also Read: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக MLA குற்றவாளி: 9 ஆண்டுகளுக்கு பிறகு வந்த தீர்ப்பு - உ.பியில் பரபர!