Politics
கார் இல்லாததால் சட்டமன்றத்துக்கு 350 கி.மீ பைக்கிலேயே பயணம் - ம.பி-யில் இப்படி ஒரு MLA : யார் இவர் ?
கடந்த நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வெவ்வேறு கட்டமாக நடைபெற்ற இந்த மாநிலங்களின் வாக்குப்பதிவுகள், இறுதியாக தெலங்கானா மாநிலத்தோடு நிறைவடைந்தது. 230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்த சூழலில் தான் புதிதாக தொடங்கப்பட்ட கட்சியின் எம்.எல்.ஏ., ஒருவர் தன்னிடம் கார் இல்லாத காரணத்தினால், 350 கி.மீ வரை பைக்கில் சென்றுள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ம.பி-யில் புதிதாக தொடங்கப்பட்ட கட்சி தான் பாரத் ஆதிவாசி கட்சி (Bharat Adivasi Party -BAP).
இந்த கட்சி சார்பாக பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், சைலானா (Sailana) என்ற தொகுதியில் போட்டியிட்ட கம்லேஷ்வர் தோடியார் (Kamleshwar Dodiyar) என்பவர் 71,219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த செப்டெம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட (2 மாதங்களுக்கு முன்பு) இந்த கட்சி சார்பில் முதல் முறையாக எம்.எல்.ஏ.,-வாக கம்லேஷ்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மிகவும் வசதி குறைவான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கம்லேஷ்வர், சட்டம் படித்துள்ளார். மண் வீட்டில் வசிக்கும் இவர், தனது படிப்பிற்காக கூலி வேலை செய்தும், டெலிவரி போன்ற சில வேலைகள் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி கொண்டார். இதையடுத்து பொது சேவை செய்வதில் நாட்டம் கொண்ட இவர், 2018 சட்டமன்றத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
எனினும் இடைவிடாமல் முயன்றதால் இந்த முறை எதிர்த்து போட்டியிட்ட பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார் கம்லேஷ்வர். இவரது நண்பர்கள், உறவினர் என அனைவரிடமும் பணம் திரட்டி தேர்தலுக்கு தேவையானவையை செய்துள்ளார்.
இந்த நிலையில் முதல்முறையாக சட்டசபைக்கு செல்லும்போது, பைக்கில் சென்று அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார் கம்லேஷ்வர். தனது பகுதியில் இருந்து போபாலில் அமைந்துள்ள ம.பி சட்டமன்றத்துக்கு செல்ல இவரிடம் கார் வசதி இல்லை. எனவே தனக்கு தெரிந்தவர்களிடம் கார் உதவியை கேட்டுள்ளார். ஆனால் யாரிடமும் இருந்து சரியான பதில் இல்லை என்பதால் வேறு வழியின்றி பைக்கில் செல்ல திட்டமிட்டுள்ளார்.
அதன்படி தனது மச்சானிடம் பைக்கை பெற்றுக்கொண்டு அதில், ‘MLA‘ என்று அதில் ஸ்டிகர் ஒட்டிக்கொண்டு, தனது நண்பரை அழைத்துக்கொண்டு போபால் வரைக்கும் சென்றுள்ளார் கம்லேஷ்வர். இதில் அவரது நண்பர் பைக்கை ஓட்டவே, பின்னால் கம்லேஷ்வர் அமர்ந்துள்ளார். அதோடு அந்த கடும் குளிரிலும் 350 கி.மீ பைக்கில் சட்டமன்றத்திற்கு பயணம் செய்வதை தனது சமூக வலைதளத்தில் லைவாக வீடியோவும் வெளியிட்டார்.
பின்னர் அங்கே சென்றதும், தனது ஆவணங்களை சமர்ப்பித்து நேற்று எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து அவருக்கு தேவையான வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து கம்லேஷ்வர் கூறுகையில், "எனது வெற்றிக்காக எனது நண்பர்கள் அதிக சிரமங்களை சந்தித்துள்ளனர்.
இரவு, பகல் பாராமல், சாப்பிடாமல் அவர்கள் எனக்கு உதவியுள்ளனர். சிலர் அவர்கள் சொந்த பணத்தையும் எனக்காக செலவு செய்தனர். தற்போது எனக்கு பைக் கொடுத்தும் எனது உறவினர் உதவியுள்ளார். என்னிடம் கார் இல்லை என்பதால், நான் பைக்கில் பயணித்து வந்தேன்" என்றார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!