Politics
பதவி ஏற்கும்போதே நீக்கப்பட்ட காங். முதல்வர் இல்லத்தின் இரும்பு கேட் : ஆடிப்போன எதிர்க்கட்சி! காரணம் என்ன?
கடந்த நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வெவ்வேறு கட்டமாக நடைபெற்ற இந்த மாநிலங்களின் வாக்குப்பதிவுகள், இறுதியாக தெலங்கானா மாநிலத்தோடு நிறைவடைந்தது. இதில் 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
அதன்படி தெலங்கானா மாநிலம் ஐதரபாத்தின் எல்.பி ஸ்டேடியத்தில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது அம்மாநில காங்கிரஸ் தலைவரான அனுமுலா ரேவந்த் ரெட்டி, முதலமைச்சராகவும், துணை முதல்வராக மல்லு பாட்டி விக்ரமார்காவும் பதவியேற்றனர். இவர்களுடன் சேர்ந்து சீதக்கா, கொண்டா சுரேகா ஆகிய 2 பெண்கள் உட்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
தெலங்கானாவில் முன்னதாக ஆட்சி செய்த பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியை தோல்வியடைய செய்து, 92,35,792 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்று காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியமைக்கிறது. மேலும் முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவுடன் காமாரெட்டி தொகுதியில் போட்டியிட்டு ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த மாநில தேர்தலில் பாஜக வெறும் 32,57,511 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று பதவியேற்பு ஒரு புறம் நடைபெற்று கொண்டிருக்கையில், மறுபுறம், அம்மாநில முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்களும், தடுப்புகளும் அகற்றப்பட்டது. தான் பதவியேற்கும்போதே முதல்வர் இல்லத்தின் முன் கேட் அகற்ற, ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டிருக்கிறார்.
அதாவது, அம்மாநில தலைநகரான ஐதராபாத்தில் அமைந்துள்ளது மாநில முதலமைச்சரின் அதிகாரபூர்வ இல்லம். அதற்கு 'பிரகதி பவன்' (Pragathi Bhavan) என்று பெயர் உள்ளது. இங்கு இரும்பு கேட்கள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. முன்னாள் முதலமைச்சர் கே.சி.சந்திரசேகராராவ் ஆட்சியில் இது அமைக்கப்பட்டிருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக கே.சி.ஆர் ஆட்சியில் வாஸ்து சரியில்லை என்று கூறி 'பிரகதி பவன்' இடிக்கப்பட்டு, அதே இடத்தில் புது இல்லம் கட்டப்பட்டது. அப்போது இதுபோன்ற பெரிய இரும்பு கேட்கள் அமைக்கப்பட்டது. இந்த கேட்கள் மூலம் பொதுமக்கள் ட்ராபிக் உள்ளிட்ட சில பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது. மேலும் இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன் வைத்தது.
மேலும் ரேவந்த் ரெட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடனே, இந்த இரும்பு கேட்கள் அகற்றப்படும் என்று உறுதியளித்திருந்தார். இந்த சூழலில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்று கொண்டிருக்கும்போதே, முதலமைச்சர் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்கள், தடுப்புகள் அகற்ற உத்தரவிட்டுள்ளார் ரேவந்த் ரெட்டி.
அதன்பேரில், புல் டோசர், ட்ராக்டர் உள்ளிட்டவைகளுடன் அதிகாரிகள் அதனை அகற்றினர். இதனை பதவியேற்கும் மேடையிலேயே அவர் தெரிவித்தார். மேலும் இனி மக்கள் முதலமைச்சரை எளிதில் அணுகலாம் என்று கூறினார். அதோடு 'பிரகதி பவன்' என்ற பெயர் 'ஜோதிராவ் பூலே பிரஜா பவன்' (மக்கள் இல்லம்) என்று பெயர் மாற்றம் செய்தும் அறிவித்தார்.
அதுமட்டுமின்றி வரும் டிச. 8 (இன்று) காலை 10 மணிக்கு 'பிரஜா தர்பார்' என்ற மக்கள் குறைகேட்கும் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்ததன் பேரில், மாற்றுத்திறனாளி, பொதுமக்கள் என பலரது கோரிக்கைகள், குறைகளும் கேட்கப்பட்டது. பதிவியேற்ற முதல்நாளே அனைவரது கவனத்தையும் ஈர்த்து மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார் ரேவந்த் ரெட்டி.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !