Politics

'INDIA' கூட்டணி தொடர்கிறது.. பாஜகவின் பொய்களுக்கு பதிலளிக்கும் வகையில் கூடிய கூட்டணி கட்சி தலைவர்கள் !

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ’இந்தியா’ என்ற பெயரை கேட்டாலே பாஜக தலைவர்கள் அலறி வருகின்றனர். முதன் முறையாக அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா, தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள INDIA என்ற பயோவை 'பாரத்' என்று மாற்றி "ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபட வேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக உழைப்போம். இது 'பாரதம்'. மோடி பாரதத்திற்கான பிரதமர்" என்று கூறினார்.

அதன் பின்னர் மோடி தீவிரவாத இயக்கங்களின் பெயரில் கூட இந்தியா இருக்கிறது என பயத்தில் கூறியிருந்தார். நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் நரேஷ் பன்சால் "இந்தியா என்பது பிரிட்டிஷ் காலனியாத்த ஆட்சியாளர்களால் வைக்கப்பட்ட பெயர். நாட்டின் உண்மையான பழமையான பெயர் பாரத் என்பதுதான். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்யவேண்டும்"என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியா என்ற பெயரைக்கண்டு பாஜகவினர் அஞ்சிவருவது வெளிப்படையாகவே தெரிந்தது.

இதனிடையே 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் சற்று பின்னடைவை சந்தித்தது. உடனடியாக பாஜக, மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள் இந்தியா கூட்டணி இனி கிடையாது. அதன் பல தலைவர்கள் அதில் இருந்து விலகுவார்கள் என்று கூச்சலிட்டன. எனினும் இந்தியா கூட்டணி அப்படியே தொடரும் என இந்தியா கூட்டணி தலைவர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், பாஜக மற்றும் அதன் ஆதரவு ஊடகங்களின் பொய் பிரச்சாரத்தை தோலுரித்து காட்டும் வகையில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த 17 கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், காங்கிரஸ் சார்பில் கார்கே, ராகுல்காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்திரி, மாநிலங்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் பிரமோத் திவாரி, பொதுச்செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கேசி வேணுகோபால், மற்றும் கவுரவ் கோகாய், நாசிர் உசேன், ரஜினி பட்டேல் ஆகியோர் பங்கேற்றனர்.

தி.மு.க சார்பில் திருச்சி சிவா, ஜே.எம்.எம் கட்சி சார்பில் மஹுவா மஜ்ஜி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ஆர்.எஸ்.பி சார்பில் என்.கே. பிரேமசந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பினாய் விஷ்வம், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் லாலன்சிங், சமாஜ்வாடி சார்பில் ராம்கோபால்யாதவ், ஆர்.எல்.டி சார்பில் ஜெயந்த் சவுத்திரி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் வந்தனா சவான், ஆம் ஆத்மி சார்பில் ராகவ் சதா ஆகியோர் பங்கேற்றனர். இதன் மூலம் இந்தியா கூட்டணி அப்படியே இருக்கிறது என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 5 மாநிலங்களில் பாஜகவை விட அதிக வாக்குகளை பெற்ற காங்கிரஸ் - ஆதாரத்தோடு பதிவிட்டுள்ள கே.எஸ்.அழகிரி !