Politics

மிசோரமில் ஆட்சியை கைப்பற்றியது ஜோரம் மக்கள் இயக்கம் : தவிடுபொடியான தேர்தல் கருத்து கணிப்புகள் !

இந்தியாவில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் 4 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில்,மிசோரம் மாநிலத்தில் மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், மாநிலத்தில் 21 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியமைக்கும். தற்போது மிசோராமில் ஜோரம் தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி (Mizo National Front - MNF) ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்கு தேர்தலுக்கு முந்தையை கருத்துக்கணிப்பில் தொங்கு சட்டமன்றமே அமையும் என்று கூறப்பட்டது. ஆனால், காலை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானதும் ஜோரம் மக்கள் இயக்கம் ஆரம்பத்தில் இருந்தே அதிக இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மையை நோக்கி சென்றது.

இந்த நிலையில், தற்போது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களான 21 இடங்களில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மிசோரமில் மிசோ தேசிய முன்னணியிடமிருந்து ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

தற்போதைய நிலையில், ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களிலும், மிசோ தேசிய முன்னணி 10 இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது. அதே நேரம் காங்கிரஸ் 20 % வாக்குகளை பெற்றுள்ள நிலையில், பாஜக 5 % வாக்குகளையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அவமரியாதை : ஆஸ். வாரியத்தை விமர்சிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் !