Politics

ம.பி தேர்தலில் தில்லுமுல்லு: ஓட்டு எண்ணிக்கைக்கு முன் தபால் ஓட்டு பெட்டியை திறந்த கலெக்டர்- காங். புகார்!

மத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சியை பிடித்தது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் இந்த நிலை மாறியது

2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி அலைவே தொடர்ந்து எழுந்து வருகிறது.

அங்கு கடந்த 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சியே ஆட்சியமைக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன. இந்த நிலையில், அங்கு ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் மற்றும் பணியாளர்கள் தபால் ஓட்டு பெட்டிகளை திறந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்ததும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. அதே போல தபால் வாக்குகளும் ஓட்டு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனிடையே பாலகாட் மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே கலெக்டர் மற்றும் பணியாளர்கள் தபால் ஓட்டு பெட்டிகளை திறந்துள்ளதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்து இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து , பாலகாட் மாவட்ட தபால் ஓட்டுக்கான நோடல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்தது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதோடு இந்த குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் கமல்நாத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read: எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அதிபர்தான் பொறுப்பு : இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் கருத்து !