Politics
“கொலீஜியம் பரிந்துரைகள் இழுத்தடிப்பு - உச்ச நீதிமன்றத்துக்கே நெருக்கடி கொடுக்கும் ஒன்றிய அரசு” : முரசொலி!
உச்சநீதிமன்றத்துக்கே நெருக்கடி!
மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் மூலமாக நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று உச்சநீதிமன்றத்துக்குச் செல்கிறோம். ஆனால் உச்சநீதிமன்றத்துக்கே ஒன்றிய அரசு நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. ‘கொலீஜியம்’ எனப்படும் நீதிபதிகள் தேர்வுக்குழு பரிந்துரைகளுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் தராமல் ஒன்றிய அரசு இழுத்தடித்து வருவதை தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம் கண்டித்துக் கொண்டு இருக்கிறது.
உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றத்துக்கான நீதிபதிகளை நியமனம் செய்யும் அதிகாரம் உள்ள அமைப்பு கொலீஜியம் ஆகும். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன், உச்சநீதி மன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இவர்கள் பரிந்துரை செய்வதை அரசு ஏற்கும். அது தான் நடைமுறையாக இருந்தது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல் அதிலும் சிக்கல் ஏற்பட்டது.
கொலீஜியம் பரிந்துரை செய்வதை ஏற்பது இல்லை. நிராகரிக்கிறார்கள். மேலும், கொலீஜியம் பரிந்துரை செய்வதற்கு அனுமதி வழங்காமல் கிடப்பில் போடுகிறார்கள். இதனை பல முறை உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டி வருகிறது. ஆனாலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அதே மந்தகதியில் தான் தனது செயல்பாடுகளை வைத்துள்ளது.
கடந்த 20 ஆம் தேதி அன்றும் உச்சநீதிமன்றம் இது பற்றி கவலையைத் தெரிவித்து இருக்கிறது. நாங்கள் அனுப்பி வைப்பதை முழுமையாக ஏற்காமல், ‘குறிப்பிட்ட’ சிலரை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன் என்பது தான் உச்சநீதிமன்றம் எழுப்பும் கேள்வி ஆகும்.
பஞ்சாப் -–- அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 5 மூத்த வழக்கறிஞர்களின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதில் இருவர் சீக்கிய மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள். அந்த இருவருக்கு மட்டும் ஒன்றிய அரசு அனுமதியை வழங்கவில்லை. இதுதான் சமீபத்திய சர்ச்சைக்குக் காரணம் ஆகும். கொலீஜியத்தின் பரிந்துரைகளுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் விசாரணையில் உள்ளது. இந்த மனுக்களின் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதாஷூ துலியா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னால் கடந்த 20 ஆம் தேதி நடந்தது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் 11 பேர் பெயரை பரிந்துரை செய்து கொலீஜியம் அனுப்பியதாகவும் அதில் 5 பரிந்துரைகளுக்கு மட்டுமே ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததாகவும் நீதிபதிகள் தகவல் கூறினார்கள். “இது வரை நாங்கள் அனுப்பிய 8 நீதிபதிகளின் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தரவில்லை. கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயர்களில் ‘குறிப்பிட்ட’ சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து ஒப்புதல் அளிக்கும் அணுகுமுறையை ஒன்றிய அரசு கடைப்பிடிக்கிறது. இதன் காரணமாக நீதிபதிகளின் பணி மூப்பு பாதிக்கப்படுகிறது. இது நல்ல நடைமுறையாக இல்லை” என்று நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம், கவலை, வருத்தம் தெரிவிப்பது இது முதல் முறை அல்ல. தொடர்ந்து இது நடந்து வருகிறது.
கடந்த 7 ஆம் தேதியும் உச்சநீதிமன்றம் இதே கருத்தை இன்னும் கடுமையாகக் கூறியது. “வழக்கறிஞர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் நீதிபதி பதவியை பொறுப்புணர்வுடன் சமூகத்துக்கான பங்களிப்பாகக் கருதி ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் கொலீஜியம் பரிந்துரைப்பதில் ‘குறிப்பாக’ சிலரை மட்டும் பிரித்தெடுத்து அரசு நியமனம் செய்கிறது. இது வெற்றிகரமான வழக்கறிஞர்களை நீதிபதி பணிக்கு கொண்டு வருவதற்கு உதவாது. இந்த நடைமுறையை நிறுத்துமாறு திட்டவட்டமாகக் கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோல், நீதிபதிகள் பணியிட மாற்றம் தொடர்பான பரிந்துரைகளுக்கும் ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு விரும்பாத முடிவை எடுக்க வேண்டிய சூழல் எங்களுக்கு வராது என நம்புகிறோம்” என்று நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதாஷூ துலியா ஆகியோர் கடுமையாகக் கருத்துத் தெரிவித்தார்கள்.
கொலீஜியம் என்ற அமைப்பு முறையைக் கலைக்க வேண்டும் என்றே பா.ஜ.க. அரசு நினைக்கிறது. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை 2014 ஆம் ஆண்டே உருவாக்கியது ஒன்றிய அரசு. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் எனப்படும் புதிய தேர்வு முறை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகளை உள்ளடக்கியது. ஆனால் அதில் சட்ட அமைச்சர், இரண்டு நிபுணர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் இருவரையும் அரசு நியமிக்கும்.
‘இது சுதந்திரமான நீதித்துறை செயல்பாட்டை பாதிக்கும், இந்த ஆணையம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்று கூறி அந்த அமைப்பையே 2016 ஆம் ஆண்டு கலைத்துவிட்டது உச்சநீதிமன்றம். அது முதல் ஒன்றிய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்குமான மோதல் நடக்கிறது. உச்ச நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட பரிந்துரைகளை தாமதப்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘அரசின் தாமதம் நீதிமன்ற அவமதிப்பு’ என மனுதாரர்கள் தரப்பு தெரிவிக்கிறது.
“கொலீஜியம் பரிந்துரைகள் மீது 3 முதல் 4 வாரங்களுக்குள் பரிசீலனை செய்து நீதிபதிகள் நியமனத்துக்கான ஒப்புதலை ஒன்றிய அரசு அளிக்க வேண்டும்” என்று மனுதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.ஒவ்வொரு முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும் போதும் எதையாவது சொல்லி நாள் கடத்தி வருகிறது பா.ஜ.க. அரசு.
அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கிய அனைத்து அமைப்புகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறது என்று சொல்வது இதனால் தான்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!