Politics
“உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டியை அரசியலாக்க நினைத்த பாஜக” : மோடி அரசை வெளுத்து வாங்கிய ‘முரசொலி’ !
கிரிக்கெட்டையும் கெடுத்த பா.ஜ.க.!
உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணியால் இம்முறை பெற முடியவில்லை. அதனால் என்ன? இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற நாடு இந்தியா. இம்முறை பெற முடியாமல் போய்விட்டது. அடுத்தமுறை வெல்லும். எனவே, இத்தோடு அனைத்தும் முடிந்துவிடப் போவது இல்லை.
ஆனால் இப்படி யோசித்துப் பாருங்கள்... உலகக் கோப்பையை இந்திய அணி வென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? ஏதோ மொத்த ரன்னையும் பிரதமர் நரேந்திர மோடி தான் எடுத்ததைப் போலக் குதித்திருப்பார்கள்.
குஜராத்தில் நடந்ததால் இந்த வெற்றி -- நரேந்திர மோடி மைதானத்தில் நடந்ததால் இந்த வெற்றி -- மோடி பிரதமராக இருப்பதால் வெற்றி -- அவர் விளையாட்டைப் பார்க்க வந்ததால் வெற்றி - அமித்ஷா மகன் ஜெய்ஷா கிரிக்கெட் போர்டு செயலாளராக இருப்பதால் வெற்றி - என்று சொல்லி உயிரைக் கொடுத்து விளையாடிய மொத்த வீரர்களையும் அவமானப்படுத்தி இருப்பார்கள்.
‘உலகம் வென்ற மோடி -- உலகக் கோப்பையை வென்றார்' என்று சொல்லி இருப்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு வரும் 2ஜி மாநாடுகளின் தலைமைப் பதவியையே பெரிய சாதனையைப் போலக் காட்டி ஓராண்டு முழுக்க - அனைத்து மாநிலங்களிலும் விழா எடுத்தவர்கள், உலகக் கோப்பையில் வென்றால் விட்டு வைப்பார்களா? "2023 உலகக் கோப்பை--2024 மூன்றாவது முறையாக பிரதமர்' என கற்பனையில் மிதப்பார்கள்.
இவை எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் கிரிக்கெட் தோல்வி கூட, வாழ்க்கைத் தோல்வியாக உருவகப்படுத்தப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை வைத்து அரசியல் செய்ய நினைத்தது பா.ஜ.க. இறுதிப் போட்டியை நடத்த புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், டெல்லி மைதானம் ஆகியவை இருக்கிறது. இவை அனைத்தையும் விட்டு விட்டு அகமதாபாத் அழைத்துச் சென்றார்கள். பிரதமரின் மாநிலத்தில், பிரதமர் பெயரால் அமைந்த மைதானத்தில் நடந்தப்பட்டு இந்தியா வெற்றி பெற்றால் 'மோடியே வெற்றி பெற்றதாக அர்த்தம்' என காட்ட நினைத்தார்கள்.
அந்த மைதானம் உலகக் கோப்பை விளையாட்டு நடக்குமளவுக்கு இன்னும் முழுமையாகத் தயார் ஆகவில்லை. இறுதிப் போட்டி நடத்தப்படும் மைதானமானது, கிரிக்கெட் விளையாட்டுக்கு நன்கு பழக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அகமதாபாத் மைதானத்திலோ வெறும் 32 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அங்கே விளையாடியாக வேண்டிய நெருக்கடியை உருவாக்கினார்கள். இதேபோல், இறுதிப் போட்டிக்கு முன்பு போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சி, டிரோன்கள் மூலம் ஒளி வடிவம், கலை நிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டதும் இந்திய வீரர்களுக்குத் தேவையில்லாத அழுத்தத்தைக் கொடுத்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது.
இறுதிப் போட்டியைக் காண பிரதமர் மோடி நேரில் வந்ததால், அவரை மகிழ்விக்க கிரிக்கெட் வாரியமும், குஜராத் பா.ஜ.க. அரசும் செய்த பல்வேறு ஏற்பாடுகளால் கவன திசை திருப்பல்கள் அதிகம் நடத்தப்பட்டன. இந்தியா, ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பு, உலகக் கோப்பையை ராமருக்கு மோடி அர்ப்பணிக்கும் வகையில் புகைப்படம் வெளியாகியிருந்தது.
நீல நிற உடையே இந்திய வீரர்களது அடையாளம். ஆனால் பயிற்சியின் போது காவி நிற பனியன்களை அணியக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இதனை அரசியல் தலைவர்கள் கண்டித்து கருத்துகளை வெளியிட்டார்கள். மேற்குவங்க மாநிலம் மத்திய கொல்கத்தாவில் நடந்த ஜகதாத்ரி பூஜையில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், “ஒன்றிய பா.ஜ.க. அரசு, நாடு முழுவதும் காவி வர்ணம் பூச முயற்சிக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியின் (வீரர்களின் உடை) நிறத்தை மாற்றியது ஒரு அரசியல் நடவடிக்கையாகப் பார்க்கிறேன்.
விளையாட்டை காவி நிறமாக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களை நினைத்துப் பெருமையடைகிறோம். அவர்கள் உலகக் கோப்பையில் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன். வீரர்களுக்கு ஜெர்சி நிறத்தை மாற்றியது போன்று, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு காவி வர்ணத்தை பூசியுள்ளார்கள்” என்றார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் வெற்றியை தங்களது வெற்றியாகக் காட்ட பா.ஜ.க. நினைப்பது பொதுவெளியில் அம்பலம் ஆனது.
சிவசேனைக் கட்சியின் (உத்தவ் தாக்கரே பிரிவு) மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறும்போது, "நரேந்திர மோடி பந்துவீசி, அமித் ஷா பேட்டிங் செய்வதைப் போல உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஒரு காவி கட்சியின் நிகழ்வு போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தி ருகின்றனர் பா.ஜ.க.வினர். கிரிக்கெட் விளையாட்டில் அரசியலைக் கொண்டு வரவேண்டிய அவசியமில்லை.
ஆனால் அகமதா பாத்தில் நடைபெறும் போட்டியில் அரசியல் கலக்கப்படுகிறது. பிரதமர் மோடி கலந்துகொண்டதால்தான் இந்தியா உலகக்கோப்பையை வென்றது என பா.ஜ.க.வினர் கூறுவதற்கும் வாய்ப்புள்ளது. அவர்கள் அப்படிக் கூறினாலும் எனக்கு ஆச்சரியமில்லை. இந்த நாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.” என்று சொன்னார். இவை அனைத்தும் உண்மையில் நடக்க இருந்தவைதான்.
"ஆளும் பாரதிய ஜனதா கட்சி 'அரசியல் நிகழ்வை' நடத்த விரும்பியதால், கிரிக்கெட் விளையாட்டில் நாட்டின் பாரம்பரிய அதிகார மையமாக இருந்த மும்பையிலிருந்து குஜராத்தில் உள்ள அகமதாபாத்திற்கு மாற்றியது" என்றும் அவர் சொன்னார். அந்த வகையில் தனது நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தோற்றது இந்திய வீரர்கள் அல்ல. பா.ஜ.க.வின் அரசியல் தந்திரங்கள்தான் தோற்றுள்ளது.
விளையாட்டுப் போட்டியை அரசியலாக ஆக்க நினைத்த பா.ஜ.க. தோற்றிருக்கிறது. அதன் தொடர் தோல்வியில் இதுவும் ஒன்று.
முரசொலி தலையங்கம்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!