Politics

”பாஜகவுக்கு வாக்களித்தால் மட்டுமே குடிநீர் கொடுப்போம்” - ம.பி-யில் அரசு குழாயை மூடிய பாஜக தொண்டர்கள் !

மத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சியை பிடித்தது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் இந்த நிலை மாறியது

2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி அலைவே தொடர்ந்து எழுந்து வருகிறது.

அங்கு கடந்த 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சியே ஆட்சியமைக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் கூறின. இந்த நிலையில், அங்கு பாஜகவுக்கு ஓட்டு போட்டால் மட்டுமே தண்ணீர் கொடுப்போம் என அமைச்சரின் ஆட்கள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில், பாஜக அமைச்சர் பிரிஜேந்திர சிங் யாதவின் தொகுதியில் உள்ள நயகெடா என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, தண்ணீர் பற்றாக்குறையை நீக்க அரசு சார்பில் 4 ஆள்துழை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் பொதுமக்கள் தண்ணீர் பிடிப்பது வழக்கம்.

இந்த நிலையில், தேர்தலின் போது அங்கு வந்த பாஜகவை சேர்ந்த சிலர், ”பாஜகவுக்கு வாக்களித்ததற்கான ஆதாரத்தை கொடுத்தால் மட்டுமே குடிநீர் வழங்குவோம். இல்லையென்றால் தேர்தல் முடிவு வரை தண்ணீர் கிடையாது" பொதுமக்களை தண்ணீர் பிடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் காலிகுடத்துடன் அந்த பகுதியில் காத்திருக்கின்றனர். இதனிடையே இதுகுறித்த செய்திகள் ஊடகஙகளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த கேள்விக்கு “தேர்தலுக்குப் பிறகும் ஏன் இப்படி நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன்” என அமைச்சர் பிரிஜேந்திர சிங் யாதவ் கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.