Politics

“BJP - BRS திரையில் மட்டுமே சண்டையிடுகிறது, ஆனால் பின்னால்..” -காங்கிரஸில் இணைந்த நடிகை விஜயசாந்தி பகீர்!

இந்தியாவில் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் விஜயசாந்தி. 1980-ல் கல்லுக்குள் ஈரம் என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன்பிறகு தொடர்ச்சியாக தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானார். ரஜினி நடிப்பில் வெளியான 'மன்னன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த விஜயசாந்தி, தொடர்ச்யாக படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.

நடிப்பில் இருந்து அரசியலுக்கு செல்ல விரும்பிய இவர், 1998-ம் ஆண்டு தெலங்கானா பாஜகவில் இணைந்தார். 2005 வரை அக்கட்சியில் இருந்த அவர், பின்னர் அதில் இருந்து விலகி 2009-ல் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்தார். அந்த கட்சியிலிலும் 2014 வரை இருந்த இவர், 2014-ல் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், 2020-ல் விலகி மீண்டும் பாஜகவிலேயே இணைந்தார். ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் அரசியல் என இரண்டையும் விடாமல் தொடர்ந்து வந்த இவர், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்தபோது எம்.பி-யாகவும் பதவி வகித்தார்.

பின்னர் அவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து அதிரடியாக விலகினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலங்கனா முன்னாள் எம்.பி.க்கள் கோமதிரெட்டி, ராஜகோபால் ரெட்டி, ஜி.விவேகானந்த், எனுகு ரவீந்தர் ஆகியோர் பா.ஜ.க.வில் இருந்து விலகினர். இதில் ராஜகோபால் ரெட்டியும் விவேகானந்தரும் காங்கிரசில் இணைந்த நிலையில், நேற்றைய முன்தினம் மாலை நேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார்.

விஜயசாந்தி காங்கிரஸுக்கு சென்றிருப்பது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இதன் மூலம் அதிக வாக்குகள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்ததும் அவ் அவருக்கு தெலங்கானா தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜகவும், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் திரையில் மட்டுமே சண்டையிடுவதாகவும், பின்னால் அவர்கள் ரகசிய கூட்டணி வைத்துள்ளதாகவும் விஜயசாந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, “தற்போது நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பலரது வீடுகளிலும் ED, CBI ரெய்டுகளை பாஜக நடத்தியுள்ளது. ஆனால் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் வீட்டில் இதுபோல் எந்த ஒரு ரெய்டும் நடக்கவில்லை.

மோடி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் என்று நான் பாஜகவில் இணைந்தேன். ஆனால் கே.சந்திரசேகர் ராவ் ஒரு ஊழல் மிகுந்த அரசியல்வாதி என்று தெரிந்தும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் மோடி தெலங்கானா வருகிறார், கே.சி.ஆர் பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் விமர்சிக்கிறார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாஜகவும், பி.ஆர்.எஸ் கட்சியும் இணைந்து செய்லபடுகிறது. அவர்கள் திரையில் மக்கள் மத்தியில் மட்டுமே சண்டையிட்டு கொள்கிறார்கள். திரைக்கு பின்னர் இருவரும் இரகசிய சந்திப்பு நடத்துகின்றனர். சஞ்சய் குமார் என்பவர் கே.சி.ஆருக்கு எதிராக இருந்ததால் பாஜக அவரை கட்சியில் இருந்து நீக்கியது. சஞ்சய் குமாரை நீக்கியதால் பாஜக சொந்தக் கட்சிக்கே துரோகம் செய்கிறது. பாஜகவின் பேரழிவிற்கு நாங்கள் பொறுப்பல்ல.” என்றார்.

Also Read: "அம்மையார் ஜெயலலிதாவை விட பாஜகதான் EPS-க்கு முக்கியம்" - அதிமுகவை விளாசிய அமைச்சர் தங்கம் தென்னரசு !