Politics

ம.பி-யில் சுழன்றடிக்கும் காங்கிரஸ் அலை : கரையும் பாஜக - வெளியான கருத்து கணிப்பு முடிவுகள் !

மத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சியை பிடித்தது.

ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி அலைவே தொடர்ந்து எழுந்து வருகிறது.

அங்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், Times Now மற்றும் Navbharat Samachar ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது LokPoll நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பிலும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் குறித்து 72,405 பேரிடம் LokPoll சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில், பெரும்பான்மையான வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக 230 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 45 முதல் 47 சதவீத வாக்குகளைப் பெற்று 130 முதல் 142 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனி பெரும்பான்மையான 116 இடங்களை விட அதிகமாகும்.

அதே போல, பாஜக 39 முதல் 41 சதவீத வாக்குகளுடன் 84 முதல் 98 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிற கட்சியினர் 8 முதல் 10 சதவீத வாக்குகளை பெற்று அதிகபட்சம் 4 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Also Read: 10 லட்சம் பேருக்கு 100 மருத்துவ இடங்கள் திட்டம் நிறுத்தம் - கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய ஒன்றிய அரசு !