Politics

நீதிமன்றத்துக்கு பணிந்து மசோதாக்கள் மீது நடவடிக்கை : செயல்படாமல் இருந்த ஆளுநரை செயல்பட வைத்த தமிழக அரசு !

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில்கூட ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலங்கானா ஆளுநர் தமிழிசை மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், பஞ்சாப் அரசும் இதுபோன்ற ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் "சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. அரசமைப்பு சட்டப்பிரிவு 200ன் படி மசோதாக்களுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இத்தனை காலம் என்ன செய்தார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல ஆளுநர்கள். உச்ச நீதிமன்றம் வரை வந்த பிறகுதான் ஆளுநர்கள் இதில் நடவடிக்கை" என கடுமையாக கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கைக்கு பணிந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருந்த மசோதாக்களை திருப்பியனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதன் மூலம் இதுவரை செயல்படாமல் இருந்த ஆளுநரை உச்சநீதிமன்றத்துக்கு சென்று தமிழ்நாடு அரசு செயல்பட வைத்துள்ளது.

Also Read: "அதிகாரங்களை ஆளுநர்கள் கையில் எடுக்க முடியாது" - உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து : முரசொலி தலையங்கம் !