Politics

கொரோனா, GST, பணமதிப்பிழப்பு... “பாஜக ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்...” - ராகுல் காந்தி MP தாக்கு!

தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுகிறது. இதில் மிசோரமில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

தொடர்ந்து மீதமுள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் மற்றும் சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. அதோடு ராஜஸ்தானில் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து அரசியல் கட்சிகளை விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று ராஜஸ்தானில் உள்ள சுரு தொகுதியில் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது. அப்போது பேசிய ராகுல் காந்தி எம்பி, அதானி பாக்கெட்டுக்கே மோடி பணத்தை மாற்றுவதாக கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து ராகுல் காந்தி பேசியதாவது,

"ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகு பல்வேறு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. குறிப்பாக சுகாதார திட்டம், ரூ.500-க்கு சிலிண்டர், ஓய்வூதிய திட்டம், மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உள்ளிட்ட மகத்தான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அறிவிக்கப்பட்டுள்ள எந்த திட்டங்களும் கிடைக்காது. மாறாக அதானியின் வளர்ச்சிதான் அதிகரிக்கும். ஏழை மக்களுக்கு என்று எதுவும் இருக்காது. நமது அரசு (காங்கிரஸ்) ஏழை, எளிய மக்களுக்கு என்று சேவை செய்து வருகிறது. ஆனால் மோடி அரசோ ஏழை மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.

ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாஜக அரசு ஈடுபட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டது. நாட்டிலுள்ள அரசுக்கு சொந்தமான பலவற்றையும் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறது. எங்கு பார்த்தாலும் அதானி தான். பாஜக வந்தால், பணக்காரர்களுக்கு தான் அனைத்தும் கொடுக்கப்படும். அதானிக்குத்தான் மோடி அரசு உதவும்.

பிரதமர் மோடி, 'கருப்பு பணத்தை ஒழிக்காவிட்டால் என்னை தூக்கிலிடுங்கள்' என்று கூறினார். ஆனால், கருப்புப் பணத்தை அவர் ஒழிக்கவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட அவர் மக்கள் நலனை பற்றி கவலைகொள்ளவில்லை. மாறாக பாத்திரங்களில் ஒலி எழுப்பியும், மொபைல் போன்களில் ஒளி எழுப்பியும் கொரோனாவை விரட்ட முயற்சித்தார்கள்.

ஆனால் மக்களோ ஒரு பக்கம், ஆக்சிஜன், மருந்துகள், உணவு என எதுவும் இன்றி உயிரிழந்து வந்தனர். அப்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு தான் மக்களுக்கு தேவையான அனைத்தும் செய்தது. மாநில அரசின் முயற்சியால் தான் ஒவ்வொரு வீடுகளிலும் உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டது. மருந்துகள், ஆக்சிஜன் என கொடுக்கப்பட்ட மக்கள் உயிர் காப்பாற்றப்பட்டது.

காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கையால் மக்கள் உயிர் காப்பற்றப்பட்டது. காங்கிரஸ் ஏழை மக்களின் அரசு. ஏழைகளின் பாக்கெட்டுகளில் பணத்தை வைப்பது தான் காங்கிரஸின் வேலை. ஆனால் பாஜக அரசின் வேலையோ, அதானியின் பாக்கெட்டுக்கு பணத்தை அனுப்புவது." என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.

Also Read: ம.பி-யில் சுழன்றடிக்கும் காங்கிரஸ் அலை : கரையும் பாஜக - வெளியான கருத்து கணிப்பு முடிவுகள் !