Politics

“என்ன நடந்தாலும் சரி, கெஜ்ரிவால்தான் எங்கள் முதல்வர்..” - ஆம் ஆத்மி MLA-க்கள் அதிரடி !

பாஜக ஆளாத மாநிலங்களில் தற்போது அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை ஏவி வருகிறது பாஜக. மேலும் பாஜக ஆளாத மாநிலங்களின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர்கள் என பலருக்கும் குடைச்சல் கொடுத்து வருகிறது. அதோடு ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து தொல்லை செய்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட ஆம் ஆத்மி கட்சியை சார்ந்த டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு, விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், அவரை அவரது ஆதரவாளராகளுடன் பாஜகவில் சேர வறுபுறுத்தப்பட்டதாக மணீஷ் குற்றம்சாட்டினார். அனால் அவர் மறுப்பு தெரிவித்ததால், அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.

மேலும் அக்கட்சியிலுள்ள முக்கிய உறுப்பினர்களுக்கு பணத்தாசை காட்டி தங்களது பக்கம் இழுக்கவும் முயன்று வருகிறது. தொடர்ந்து பஞ்சாபில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஜஸ்வந்த் சிங்கையும் ஊழல் குற்றசாட்டுகளை சுமத்தி அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு இதுபோன்ற குடைச்சலை கொடுத்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

இந்தசூழலில் டெல்லி அரசின் மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு குறித்த புகாரில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விசாரித்து வருகிறது சிபிஐ. மேலும் அவரை கைது செய்து ஆட்சியை கலைக்கவும் பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

மேலும் கடந்த 2-ம் தேதி இது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மனை அனுப்பியது. ஆனால் அது சட்டவிரோதம் என கூறி, சம்மனுக்கு ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்றும், அவர் கைது கூட செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் கூட அவரே முதலமைச்சராக தொடர்வார் என்று ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பலவற்றை பற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் பேசியதாவது,

" டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டும். சிறைக்குச் சென்றாலும் கெஜ்ரிவால் முதல்வராக நீடிக்க வேண்டும். ஆட்சியில் இருந்து அவரை அகற்ற முடியாத காரணத்தால், பல்வேறு இன்னல்களை கொடுத்து வருகிறது பாஜகவும், மோடியும்.

முதலமைச்சர் கெஜ்ரிவால் சிறை சென்றாலும், அங்கே வைத்து அமைச்சரவை கூட்டத்தை நடத்துவோம். இதற்காக நீதிமன்றத்திடம் அனுமதியும் வாங்குவோம்."

Also Read: “மனிதனால் உருவாக்கப்பட்ட சனாதனத்தை ஏற்க முடியாது” - அமைச்சர் சேகர்பாபு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம்