Politics
சிவாஜி முதல் பாரதியார் வரை : பாஜக தலைவர் அண்ணாமலையின் உருட்டுகள் - ஒரு பார்வை !
பாஜக தலைவர் அண்ணாமலையின் பொய்கள் குறித்து விகடன் இதழில் செய்தி தொகுப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதின் முழு விவரம் :
இதுவரையிலான அண்ணாமலையின் பொய்களைத் தொகுக்கலாம் என நான்கு கன்டெயினர் லாரிகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு களமிறங்க முடிவு செய்தோம்.
சில தினங்களுக்கு முன், "கோவில்பட்டி வீரலட்சுமி ஆங்கிலேயர்கள் காலத்தில் சாதியை எதிர்த்துப் போராடினார்" என்று பேசியிருந்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
"என்ன சிம்ரன் இதெல்லாம்?" என கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் நடித்த சிம்ரனே கேட்கும் அளவிற்கான பொய்யாக இருந்தது இது. இதுவரையிலான அண்ணாமலையின் பொய்களைத் தொகுக்கலாம் என நான்கு கன்டெயினர் லாரிகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு களமிறங்க முடிவு செய்தோம். அந்த யோசனையை செயல் வடிவமாக்கும் முயற்சியின்போதே, "1931 ஆம் ஆண்டு ஈரோட்டில் கடைசியாக உரையாற்றினார் மகாகவி பாரதியார்" என்று 1921 ஆம் ஆண்டில் உயிரிழந்த பாரதியாரைப் பற்றி ஒரு பொய்யை கிளம்பியுள்ளார் அண்ணாமலை. "பாரதியார் 10 வருசத்துக்கு முன்னாலயே இறந்ததுக்கு நாங்க என்ன ஜீ பண்றது?" என பாஜகவினர் விளக்கம் கொடுக்காத குறையாக சமாளித்து வருகின்றனர். ஆனாலும், எங்க கன்டெயினரில் இருந்து ஒவ்வொன்றாக கொட்டுகிறோம். அந்த உருட்டுகளை நீங்களே பாருங்கள்.
உருட்டு 1 :
"எனக்குத் தெரிந்த ஒரே வீரலட்சுமி ஆங்கிலேயர்கள் இருக்கும்போது சாதியை எதிர்த்துப் போராடிய கோவில்பட்டி வீரலட்சுமிதான்" என்று கூறியிருந்தார்.
●
உண்மை : கோவில்பட்டி வீரலட்சுமி 1961 ஆம் ஆண்டு பிறந்து, 1990 ஆம் ஆண்டு மறைந்தவர். 1947 ஆம் ஆண்டே இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது.
உருட்டு 2 : மருதமலை கோயிலும் மின்சாரமும்:
சென்ற மாதம் கோயம்பத்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது, "1962 ஆம் ஆண்டு வரை மருதமலை கோயில் முருகனைப் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு மின்சாரம் இருக்காது. மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்கக் கூடாது என திமுக கொள்கையாகக் கொண்டிருந்தது. அதை உடைத்து மின்சாரம் கொடுத்தவர் சின்னப்பா தேவர். திமுக சனாதன தர்மத்திற்கும் இந்து தர்மத்திற்கும் எதிராக இருக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு" என்று அண்ணாமலை பேசியிருந்தார்.
●
உண்மை: 1967 இல் தான் தி.மு.க முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1962 இல் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.
உருட்டு 3 : மருத்துவ படிப்பில் முதுநிலைக்கான இடங்கள்.
"இந்தியாவில் மொத்தம் 1,80,000 க்கும் மேல் முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் இருக்கிறது. அவற்றில் கடந்த ஆண்டு ஏகப்பட்ட சீட் நிரம்பவில்லை" என்று செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறினார்.
●
உண்மை : இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் மொத்தமே 1,07,948 மட்டுமே உள்ளன. அவற்றில் 67,802 முதுநிலை இடங்கள் உள்ளன. அடுத்ததாக, 2022-23 ஆம் கல்வியாண்டில் 4,400 முதுநிலை மருத்துவ இடங்கள் மட்டுமே நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்தப் புள்ளி விபரங்கள் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் ஒன்றிய அரசின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டவை.
உருட்டு 4 : வல்வில் ஓரி.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களைப் பட்டியலிட்ட அண்ணாமலை, "வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், பூலித் தேவன் அவர்கள், வல்வில் ஓரி அவர்கள்.." என்று வல்வில் ஓரியையும் சேர்த்து சொன்னார்.
உண்மை : வல்வில் ஓரி சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல. அவர் சங்க காலத்தைச் சேர்ந்த கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவருக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
உருட்டு 5 : சத்ரபதி சிவாஜி.
'1967 ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி மன்னர் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு வந்தார்' என்றார் அண்ணாமலை.
●
உண்மை : சத்ரபதி சிவாஜி 1630 ஆம் ஆண்டு பிறந்து, 1680 ஆம் ஆண்டு மறைந்தவர்.
உருட்டு 6 : பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்.
'பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (EWS) 10 சதவீத இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும்' என்றார் அண்ணாமலை
●
உண்மை: முன்னேறிய பிரிவினருக்கு (FC) மட்டும்தான் பொருளாதார ரீதியிலான இந்த இட ஒதுக்கீடு கிடைக்கும்.
உருட்டு 7 : முத்து ராமலிங்கம் - அண்ணாதுரை.
"1956 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மணிமேகலை என்ற சிறுமி மிக அருமையாக தமிழ் சங்க இலக்கியப் பாடலை பாடினார். உடனே மைக்கை எடுத்த அண்ணாதுரை, இந்த பெண் அழகாக பாடினார். இதுவே கற்காலமாக இருந்தால் என்ன சொல்லிருப்பார்கள் தெரியுமா, உமையவளின் பாலை குடித்துதான் இந்த மணிமேகலை பாட்டு பாடினார் எனக் கட்டுக்கதையை கட்டி விட்டு இருப்பார்கள். நல்லவேளை பகுத்தறிவு வந்து விட்டது. மக்கள் இதையெல்லாம் நம்ப மாட்டார்கள் என அண்ணா பேசுகிறார்.
முத்துராமலிங்கம் - அண்ணாதுரை
6 ஆம் நாள் அக்கூட்டத்தில் பேச வேண்டிய முத்துராமலிங்கம், ஒரு நாள் முன்பாக 5 ஆம் நாளே மேடைக்கு வந்து பேசுகிறார். 'சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில், யார் இங்கு வந்து உமையவள் பற்றி தவறாகப் பேசியது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இதுவரை பாலில் அபிஷேகம் நடந்து இருக்கிறது, இன்னொரு முறை கடவுள் இல்லை என்று சொல்பவன் கடவுளை நம்புகின்றவர்களை பற்றி தவறாக பேசினார்கள் என்றால், இதுவரை பாலில்தான் மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் நடந்திருக்கிறது. இனி இரத்தத்தில் அபிஷேகம் நடத்தப்படும் என்று சொன்ன பிறகு, பி.டி.ராஜன், அண்ணாதுரை ஆகியோர் மன்னிப்பு கேட்டு விட்டு ஓடி வந்தார்கள் ” என்று அண்ணாமலை பேசினார்.
உருட்டு 8 :
இதற்கு கண்டனங்கள் எழவே, "இரண்டு நாட்களுக்கு முன்பு, 1956 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் நடந்ததைக் கூறினேன். அண்ணாமலை பேசியது தவறு என்கிறார்கள். தி ஹிந்து ஆங்கில நாளிதழில் ஜூன் 2,3,4 ஆகிய தேதிகளில் வெளியான செய்திகளில் பி.டி.ராஜன், அண்ணாதுரை, முத்துராமலிங்கம் ஆகியோர் பேசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. அதைப் படித்து பார்த்தால் உண்மை தெரியும்” என்று அண்ணாமலை விளக்கம் தந்தார்.
●
உண்மை :
இதையடுத்து, தி இந்து ஆங்கில நாளிதழானது 1956 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை, மதுரை தமிழ் சங்க விழா குறித்து தான் வெளியிட்ட செய்திக் குறிப்புகளை 'முத்துராமலிங்கம் சி.என்.அண்ணாதுரையும் தொடர்புடைய 1956 மதுரை நிகழ்ச்சியில் என்ன நடந்தது?' என்ற தலைப்பில் மறுவெளியீடு செய்தது. அதில், அண்ணாதுரை மன்னிப்பு கேட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் வி.எஸ்.நவமணி இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "அண்ணாவின் கருத்தில் முத்துராமலிங்கம் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தது. ஆனால், அண்ணாவை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேவர் சொல்லவில்லை" என்று கூறியிருக்கிறார்.
உருட்டு 9 : இந்துக்களின் கோயில்களை இடித்த டி.ஆர்.பாலு !
"100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்துக்களின் கோயில்களை தான் இடித்ததை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பெருமையாகப் பேசுகிறார். இதற்காகத்தான் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்" என்று அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதோடு, 40 நொடிகள் ஓடக்கூடிய டி.ஆர்.பாலுவின் காணொளி ஒன்றையும் அதோடு இணைத்திருந்தார்.
●
உண்மை : ஆனால், முழு காணொளியில் டி.ஆர்.பாலு என்ன பேசுகிறார் என்றால், “என்னுடைய தொகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் விரிவாக்கத்தின் போது மூன்று கோயில்களை இடித்தேன். சரஸ்வதி, லெட்சுமி, பார்வதி ஆகிய கோயில்களை இடித்தேன். பலர் வேண்டாம் என்றார்கள். வேறு வழியில்லை அப்பணிக்காக இடித்துதான் ஆக வேண்டும் என்று சொல்லி இடித்தேன். அதை விடச் சிறப்பானதாக அக்கோயில்களைக் கட்டிக் கொடுத்தேன். 100, 200 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய வகையில் மண்டபம் எல்லாம் வைத்து புதிய கோயில் கட்டிக் கொடுத்தேன்” என்று பேசியிருந்தார். அக்காணொளியில் ஒரு சிறிய பகுதியை மட்டும் வெட்டி எடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார் அண்ணாமலை.
உருட்டு 10 : திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறித்த பேச்சு !
கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி, நாமக்கலில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "ஆற்காடு வீராசாமி அண்ணன் இப்ப இல்ல.. இறைவனடி சேர்ந்து விட்டார்.." என்று பேசியிருந்தார் அண்ணாமலை. அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பாஜகவினரால் வைரலானது.
●
உண்மை:
87 வயதான ஆற்காடு வீராசாமி உயிருடன்தான் உள்ளார்.
உருட்டு:1931 ல் கடைசியாக ஈரோட்டில் மனிதனுக்கு மரணமில்லை என்ற தலைப்பில் பேசினார்.
●
உண்மை:
1921 செப்டம்பர் 12 ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் இறந்து போன பாரதியார்,
10 வருடம் கழித்து ஈரோட்டில் எப்படி பேசியிருப்பார் அண்ணாமலை?
உருட்டு: இந்தியாவின் முதல் குடியரசு தின விழாவுக்கான அழைப்பிதழை மஹாத்மா காந்திக்கு தராமல் அவமானப் படுத்தியது காங்கிரஸ்.
●
உண்மை:
காந்தியடிகள் கோட்சேவால் கொல்லப்பட்டது ஜனவரி 30 1948.
இந்தியாவின் முதல் குடியரசு தினம் ஜனவரி-26 ,1950.
Also Read
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!