Politics

”சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்தவில்லை என்றால்...” - காரணத்தை கூறி மோடியை விமர்சித்த ராகுல் காந்தி !

இந்தியாவில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலுக்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறது. தொடர்ந்து தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் மாநிலத்தில் வரும் நவம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனால் அங்கே காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் அங்கிருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் தொகுதியில் இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். OBC என்று சொல்லப்படும் பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்த சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்.

ஆனால் நமது பிரதமர் மோடி, இது குறித்து பேசுவதையே தவிர்த்து வருகிறார். பிரதமர் மோடி ஒவ்வொரு பேச்சிலும் ஓபிசி வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ஆனால் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பயப்படுகிறார். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை மோடி அரசு வெளியிடாமல் உள்ளது. ஏனெனில், பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற இட ஒதுக்கீட்டைப் பெறாமல் உள்ளனர். புள்ளி விவரத்தை வெளியிட்டால் அது குறித்த உண்மை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தெரிந்துவிடும் என்பதால்தான் மோடி அரசு அதனை வெளியிடாமல் உள்ளது.

ஒரு அரசாங்கத்தை நடத்துவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று நாட்டின் பணக்காரர்களுக்கு உதவுவது அல்லது ஏழைகளுக்கு உதவுவது. நாங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் நாட்டின் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், வேலையில்லாதவர்கள் ஆகியோருக்கு உதவப்பட்டது.

நாங்கள் கடந்த தேர்தலில் 2 பெரிய வாக்குறுதியை அளித்தோம். அதனை நிறைவேற்ற முடியாது என பாஜக சொன்னது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, 2 மணி நேரத்தில் அதனை நிறைவேற்றிக் காட்டினோம். எவ்வளவு வேகமாக அதனை நடத்தி முடிக்க முடியுமோ, அந்த அளவுக்கு வேகமாக நடத்தி முடிப்போம். சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பைத் தொடங்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 26 லட்சம் விவசாயிகளின் ரூ.23 லட்சம் கோடி கடனை நாங்கள் தள்ளுபடி செய்வோம். தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.7 ஆயிரம் வழங்குவோம்.” என்றார்.

Also Read: அன்று மறுப்பு.. இன்று ரத்து.. மிசோரமில் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் - பயணத்தை ரத்து செய்த மோடி!