Politics
அன்று மறுப்பு.. இன்று ரத்து.. மிசோரமில் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் - பயணத்தை ரத்து செய்த மோடி!
இந்தியாவில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு ஆட்சி நிறைவடையவுள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் (நவம்பர்) மேற்கண்ட 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலுக்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறது. தொடர்ந்து தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 07-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் இங்கு தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட திட்டமிட்டிருந்தார்.
இந்த சூழலில் மிசோரமில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்புகள் நிலவி வருவதால், தற்போது பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மிசோரமில் ஜோரம்தங்கா (Zoramthanga) தலைமையிலான 'மிசோ நேஷனல் ஃப்ரண்ட்' கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த கட்சி பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் தற்போது வரை இருந்து வருகிறது.
இந்த சூழலில் மிசோரம் மாநிலத்தின் மாமித் (Mamit) என்ற தொகுதியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது அங்கே பாஜகவுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் உள்ள நிலையில், பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு பதிலாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக மணிப்பூர் கலவரத்தில் பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. இது மக்கள் மத்தியில் பாஜகவுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலமான மிசோரமும் இந்த கலவரத்தில் பாதிப்படைந்துள்ளது. இதனால் மிசோரம் மாநில மக்களுக்கு பாஜக மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக NDA கூட்டணியில் இருக்கும், மிசோரம் மாநிலத்தின் முதலமைச்சர் ஜோரம்தங்கா, பிரதமர் மோடியுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மாட்டேன் என்றும், அவருடன் மேடையை பகிர்ந்துகொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது பாஜகவுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய நேரம் அல்ல என்று கூறிய ஜோரம்தங்கா, மணிப்பூரில் நடந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு பாஜகவுடன் இணைந்து செயல்பட்டால் அது MNF (மிசோ நேஷனல் ஃப்ரண்ட்) கட்சி மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து அம்மாநில சபாநாயகர் லால்ரின்லியானா சைலோவுக்கு சீட் கொடுக்க மாட்டேன் என்று MNF கட்சி மறுப்பு தெரிவித்ததால், அவர் அதில் இருந்து விலகி கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார். இவையனைத்தும் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பிரதமரின் பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
=> 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதி :
1. மிசோரம் - நவம்பர் 07.
2. மத்திய பிரதேசம் - நவம்பர் 17
3. தெலங்கானா - நவம்பர் 30
4. ராஜஸ்தான் - நவம்பர் 23
5. சத்திஸ்கர் - முதற்கட்ட வாக்குப்பதிவு : நவம்பர் 07 ம் தேதி ,
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு : நவம்பர் 17 ம் தேதி.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!