Politics
சிறுபான்மையினர் குறித்து வெறுப்பு பிரசாரம் : அசாம் முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் !
இந்தியாவில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு ஆட்சி நிறைவடையவுள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் (நவம்பர்) மேற்கண்ட 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலுக்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறது. தொடர்ந்து தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அசாம் மாநில முதலமைச்சர் வெறுப்பு பிரசாரத்தை வெளிப்படுத்தியதற்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது தேர்தல் பரப்புரை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களும் அங்கே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக ஆளும் மாநிலமான அசாமில் முதலமைசார் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சத்தீஸ்கரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது கவர்தா தொகுதியில் (Kawardha) அவர் பரப்புரையில் ஈடுபட்டபோது, அந்த தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., முகமது அக்பர் குறித்து வெறுப்பு பிரசாரத்தை முன்வைத்தர். கடந்த அக். 18 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட்டபோது பேசியதாவது, “ஒரு அக்பர் ஒரு இடத்திற்கு வந்தால், அவர்கள் 100 அக்பர்களை அழைக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, விரைவில் அக்பரிடம் விடைபெறுங்கள். இல்லையெனில் மாதா கௌசல்யாவின் இந்த நிலம் மாசுபடும்.
சகோதர சகோதரிகளே, நீங்கள் சத்தீஸ்கரை காப்பாற்ற வேண்டும். மா கௌசல்யாவின் இந்த புனித பூமி காப்பாற்றப்பட வேண்டும், எனவே நீங்கள் அனைவரும் பாஜக வேட்பாளரான விஜய் சர்மாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இது இந்துக்களின் நாடு, இந்துக்களாகவே இருக்கும். மதச்சார்பின்மையின் இந்த மொழியை எங்களுக்குக் கற்பிக்க வேண்டாம்” என்றார்.
அசாம் மாநில முதலமைச்சரின் இந்த பேச்சு பெரும் கண்டனங்களை எழுப்பியது. இதைத்தொடர்ந்து இவரது பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் தற்போது ஹிமந்தா பிஸ்வாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம். மேலும் அவரது இந்த பேச்சுக்காக வரும் 30-ம் தேதி மாலைக்குள் விளக்கமளிக்குமாறு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!