Politics

தோல்வி பயம் : MP-களை சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவித்த பாஜக - தெலங்கானாவில் பரிதாபம் !

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் நவம்பா் 30-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலம் தொடங்கியதில் இருந்து தற்போது வரை பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சந்திர சேகர ராவ் முதலமைச்சராக உள்ளார்.

தெலங்கானாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி பெரிதாக பேசப்படாத நிலையில், ராகுல் காந்தியின் யோடோ யாத்திரை தெலுங்கானாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தெலங்கானாவில் காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகள் அங்கு நிலைமையை தலைக்கீழாக மாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து வெளியான கருத்து கணிப்பு முடிவுகளில் அங்கு காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதே நேரம் அங்கு பாஜக சொற்ப இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில், அங்கு பாஜகவின் 52 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தெலங்கானாவில் பாஜகவுக்கு மக்களவை எம்.பி.க்களாக உள்ள 4 பேரில் 3 பேர் அங்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அடுத்து வரும் பட்டியலில் மீதம் இருக்கும் 1 எம்.பி-யின் பெயரும் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக தோல்வி பயத்தில் ஏற்கனவே தேர்தலில் வென்றவர்களை பாஜக வேட்பாளர்களாக அறிவித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு முன்னர் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களிலும் எம்.பி-களாக இருப்பவர்களுக்கு பாஜக எம்.எல்.ஏ சீட் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: உயிரிழந்த முதல் அக்னிபாத் ராணுவவீரர் : மறுக்கப்பட்ட பென்ஷன் உள்ளிட்ட உரிமைகள் - முழு விவரம் என்ன ?