Politics

"இனி 40% கமிஷன் கிடைக்காது, தேர்தலில் தோல்வி என்பது பாஜகவினருக்கு தெரிந்துவிட்டது"- சித்தராமையா விமர்சனம்

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தத் தேர்தலில் பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர்.

அங்கு காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதும் பாஜக கொண்டுவந்த ஏராளமான மக்கள் விரோத சட்டங்களையும், சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களையும் ரத்து செய்து வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுக்கு தோல்வி உறுதி என்பதை அனைவரும் உணர்ந்துவிட்டதால் பாஜகவினரால் தேர்தலில் நிதி திரட்ட முடியவில்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மீதான விமர்சனத்துக்கு தனது X சமூகவலைத்தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், "கர்நாடகாவில் பாஜகவிற்கு மிகப்பெரும் நிதி ஆதாரமாக திகழ்ந்த 40% கமிஷனும் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் நிதி தேவைக்காக ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் வீடுகளில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை பாஜக ஏவி விடுகிறார்கள். தோல்விக்கு பின் காங்கிரஸ் கட்சியின் பண பலத்தால் தான் தாங்கள் தோற்றோம் என்று அறிக்கைவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை" என்று விமர்சித்துள்ளார்.

Also Read: இஸ்லாமிய இளைஞர்களை கட்டிவைத்து தாக்கிய குஜராத் போலீசார் : சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு !