Politics

நாங்கள்தான் உண்மையான கட்சி.. பாஜக கூட்டணியை ஆதரிக்க மாட்டோம் - ஜேடிஎஸ் கட்சிக்குள் வெடித்த மோதல் !

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். அதே போல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

Kumarasamy

அதனைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியோடு கூட்டணி என பாஜக தலைவர்கள் தன்னிச்சையாக அறிவித்தனர். முதலில் இதனை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி மறுத்தாலும் பின்னர் அதனை ஒப்புக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநில துணைதலைவர் சையத் சபிவுல்லா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் காதர் ஷாஹீத்தும் அக்கட்சியில் இருந்து விளங்குவதாக அறிவித்தார். இப்படி முக்கிய நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Ibrahim

இந்த நிலையில், மக்களவை தேர்தலில் பாஜகவை ஆதரிக்க மாட்டோம். 'INDIA' கூட்டணிக்குதான் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி ஆதரவு தெரிவிக்கும் என அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் இப்ராஹிம் அறிவித்துள்ளார். பெங்களூரில் பாஜக கூட்டணிக்கு அதிருப்தி தெரிவித்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் பேசிய அவர், "பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டேன். கூட்டணி குறித்து கட்சியில் ஆலோசிக்கப்படவில்லை. யாரை கேட்டு குமாரசாமி டில்லி சென்று, தன்னிச்சையாக முடிவு செய்தார். கட்சி ஒன்றும் அவரின் குடும்பம் அல்ல. அனைவரது கருத்தும் முக்கியம்.எங்களுடையது தான் உண்மையான மதச்சார்பற்ற ஜனதா தளம். என்னை யாரும் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாது. 19 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசிப்பேன். பின், தேசிய தலைவர் தேவகவுடாவை சந்தித்து, எங்கள் முடிவை தெரிவிப்போம். மக்களவை தேர்தலில் பாஜகவோடு கூட்டணியை ஏற்க முடியாது. NDIA' கூட்டணிக்குதான் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி ஆதரவு தெரிவிக்கும்"என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி ஆதரவு கொடுக்க காரணம் என்ன? : பா.ஜ.க அரசின் முகத்திரையை கிழித்த முரசொலி!