Politics

"பாஜக கூட்டணியின் 40 தலைவர்கள் எங்கள் கட்சியில் சேர ஆர்வமாக இருக்கிறார்கள்" -கர்நாடக காங்கிரஸ் அறிவிப்பு!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். அதே போல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியோடு கூட்டணி என பாஜக தலைவர்கள் தன்னிச்சையாக அறிவித்தனர். முதலில் இதனை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி மறுத்தாலும் பின்னர் அதனை ஒப்புக்கொண்டார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவோடு கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். அங்கு பாஜக ஆட்சியில் இருந்தபோது கொண்டுவந்த சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் காரணமாக சிறுபான்மையினர் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

ஆனால், தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவோடு கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநில துணைதலைவர் சையத் சபிவுல்லா, அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் காதர் ஷாஹீத்தும் அக்கட்சியில் இருந்து விளங்குவதாக அறிவித்தனர். மேலும் ஏராளமான நிர்வாகிகளும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து விலகினர்.

இந்த நிலையில், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ராமப்பா லமானி, தனது ஆதரவாளா்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநில காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான டி.கே.சிவகுமாா், "பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியும் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளதால் அக்கட்சியிலிருந்த பலா் காங்கிரஸில் சேர்ந்து வருகின்றனர். இது தவிர அக்கட்சிகளை சேர்ந்த 40-க்கும் அதிகமான தலைவா்கள் காங்கிரஸ் கட்சியில் சேர ஆா்வம் காட்டி எங்களிடம் பேசிவருகின்றனர். இதை பகிரங்கப்படுத்தக் கூடாது என்றிருந்தேன். ஆனாலும், பகிரங்கமாகக் கூற வேண்டியதாகிவிட்டது.உள்ளூா்த் தலைவா்களுடன் கலந்தாலோசித்த பிறகு, அவா்களை காங்கிரஸ் கட்சியில் சோத்துக்கொள்வது குறித்து முடிவெடுப்போம்" என்று கூறியுள்ளார்.

Also Read: தலைக்கு மேல் தொங்கும் கத்தி : ஒன்றிய அரசின் திட்டத்தால் பாதிக்கப்படும் தென்னிந்தியா - உதயநிதி எச்சரிக்கை!