Politics
அதானிக்கு நற்பெயர் கொடுக்க செபிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா ? - பாஜக அரசுக்கு காங்கிரஸ் கேள்வி !
அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டியது. பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியது.
இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், வேறு வழியின்றி அது குறித்த விசாரணைக்கு பங்குச்சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி ஒப்புக்கொண்டது. எனினும் அது குறித்த விவரங்கள் முறையாக வெளியிடப்படாமல் இருந்து வருகிறது.
இதனிடையே கடந்த மாதம், OCCRP என்ற அமைப்பு மறைமுகமாகவும், முறைகேடாகவும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அதானி குடும்ப உறுப்பினர்கள் அல்லது வர்த்தக கூட்டாளிகள் மறைமுக நிதியை (Opaque Funds) பயன்படுத்தி அதானி குழும நிறுவன பங்குகளை மொரிஷியஸ் நாட்டு நிறுவனங்கள் வாயிலாக வாங்கி விற்பனை செய்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளதாக கூறியது.அதனைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களில் மோசடி செய்த நாசர் அலி ஷபன் அஹ்லி மற்றும் சாங் சுங்-லிங் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களின் உரிமையை மொரிஷியஸ் அரசு ரத்து செய்தது.
இதனிடையே அதானியின் முறைகேடுகளை விசாரிக்கும் செபி அமைப்பு, அதானிக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன. இந்த நிலையில், அதானி குழுமத்துக்கு நற்பெயர் கொடுக்க செபிக்கு எத்தகைய அழுத்தம் தரப்பட்டதா என காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், "2014ல் அதானி குழுமம் சந்தை விலைக்கு மாறாக மின் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை அதிக விலைக்கு வாங்கியுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட ரூ.8,320 கோடியை விநோத் அதானியின் கூட்டாளிகளான சாங் சுங்-லிங் மற்றும் நாசர் அலி ஷபான் ஆகியோர் மொரிஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த நிறுவனங்கள் மூலம் கையாண்டுள்ளனர். 2016 ஜுன் 16ம் தேதியில் 8 முதல் 14 சதவீதம் பினாமி சொத்துகள் மொரிஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் உள்ள ஷெல் நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்யப்பட்டன.
இதுகுறித்த வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன்? இவை அனைத்தும், 2022ல் அதானி குழுமம் கைப்பற்றிய ஒரு செய்தி ஊடகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்ட யு.கே.சின்ஹா, 2014ல் செபியின் இயக்குநராக பதவி வகித்தபோது தற்செயலாக நடந்ததா? அதானி பங்குச் சந்தை மோசடி குறித்து முழு உண்மையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மூலம் மட்டுமே வௌிப்படும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!