Politics

ம.பி-யில் தொடர்ந்து சரியும் செல்வாக்கு: சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றிய அமைச்சர்களை வேட்பாளராக அறிவித்த பாஜக!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மை பலம் பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.

ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி அலைவே தொடர்ந்து எழுந்து வருகிறது.

அங்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு வெளியாகியுள்ள சமீபத்திய கருத்து கணிப்பு முடிவுகளில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பாஜக மேலிடம் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் தோல்வியை தவிர்க்க ஒன்றிய அமைச்சர்களாக உள்ளவர்களுக்கு பாஜக சார்பில் எம்.எல்.ஏ சீட் வழங்கப்பட்டுள்ளது. அங்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல் மற்றும் ஃபக்கன் சிங் குலாஸ்தே உள்ளிட்ட 7 எம்.பி-க்களை சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

ஒன்றிய அமைச்சர்களை சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக அறிவித்ததன் மூலம், பாஜக தோல்வி பயத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அங்கு பாஜகவின் செல்வாக்கு குறைந்து வரும் நிலையில், மக்களுக்கு ஓரளவு தெரிந்த முகங்கள் மூலம் அங்கு ஏற்படும் சேதத்தை கொஞ்சமாவது குறைக்கலாம் என பாஜக கருதுவதாக கூறப்படுகிறது.

Also Read: விவாத நிகழ்ச்சியில் அடித்துக்கொண்ட ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள்: நேரடிஒளிபரப்பில் நடந்த அதிர்ச்சி!