Politics
“நீதிபதிகள் நியமனத்தில் மெத்தனம்.. பாஜக அரசால் அவமதிக்கப்படும் அரசியலமைப்பு சட்டம்..” - கி.வீரமணி தாக்கு!
ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு இடமில்லை; மசோதாக்கள் அவையில் விவாதிக்கப்படாமல், அவசர அவசரமாக நிறைவேற்றப்படுகின்றன. கொலிஜியம் பரிந்துரைத்தும் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவதில்லை - இதுதான் மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி! வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
கடந்த 9 ஆண்டுகளுக்குமுன் ஒன்றிய அரசினை அமைக்க பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அவர்களை முன்னிறுத்தியதோடு, அவரை ‘வளர்ச்சி நாயகனாகவே’ ஆக்கி, ஒரு பிம்பத்தையும், வாக்காளரிடையே ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தி, ஆட்சியைப் பிடித்தபோது, தங்களது ஆட்சியில் -
அ. குறைந்த ஆட்சி - நிறைந்த ஆளுமை
(Minimum Government with Maximum Governance)
ஆ. வெளிப்படைத் தன்மை
(Transperancy)
இ. ‘சப்கா சாத், சப்கா விகாஸ் முழக்கம்!’
ஒருங்கிணைந்த வளர்ச்சி இருக்கும் என்றெல்லாம் மோடியே முழங்கினார் ஆட்சி ஏற்பதற்குமுன். ஆனால் இன்று, இரண்டாவது முறை ஆட்சிக்கு புதிய வித்தையைக் காட்டி, பெருத்த மெஜாரிட்டி வந்துவிட்டவுடன், அத்தனையும் தலைகீழாக நடந்துவருவது கண்டு, வாக்களித்த மக்கள் - இவர்கள் பி.ஜே.பி., மோடி ராஜ்ஜியத்தவர்கள் வெறும் ‘‘ஜூம்லா’’ பேசுவோர் - நம்பகத்தன்மைக்கும் - விரைந்த செயல்பாட்டிற்கும், இவர்களுக்கும் காததூரம் என்பதை உணர்ந்து, எப்போது பொதுத் தேர்தல் வரும்; இந்த ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வாய்ப்பு ஏற்படும் என்ற ஆதங்கத்துடன் உள்ளனர்!
உலகம் சுற்றும் பிரதமர் மோடி உள்நாட்டில் மணிப்பூர்பற்றிப் பேசாதது ஏன்? :
உலகெங்கும் சென்று திரும்பும் நமது பிரதமர், உள்நாட்டின் ஒரு மாநிலமான மணிப்பூர், ஆறுமாதங்களாகப் பற்றி எரிவதைப்பற்றியோ, ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு, அவமானத்தினால் வேதனையின் உச்சத்திற்குச் சென்ற நிலையில், இன்னும் ஒருமுறைகூட நாட்டின் பிரதமர் மோடி மணிப்பூருக்குச் சென்று, அம்மக்களுக்கு ஆறுதல் எதுவும் கூறவில்லை!
தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நீர்மேல் எழுத்துகள்.
‘‘விவசாயிகள் வருமானம் இருமடங்காகப் பெருகும்!’’
‘‘ஆண்டுதோறும் 2 கோடி பேருக்குப் புதிய வேலை வாய்ப்புகள்!’’
‘‘ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் தானே வந்து விழும்.’’
‘‘ஊழலற்ற ஆட்சியை உருவாக்கிடுவோம்!’’
இவை வெறும் நாக்கின் நர்த்தனமா? செயலின் வடிவமா? - கேட்கமாட்டார்களா, மக்கள்?
சமூகநீதி - அரசமைப்புச் சட்ட அடிப்படை கட்டுமானத்திற்கே முற்றிலும் முரணாக ‘சமூக ரீதியாக’ என்பதும், ‘கல்வி ரீதியாக’ என்பதும் அப்பட்டமாக அகற்றப்பட்டு, உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்ற ஒரு சமூக அநீதிக்கான சட்டத்தின் பொருளாதார அடிப்படையில் செயலாக்கமும், அதற்கான உடனடி நிதி ஒதுக்கீடும் என்பது சமூகஅநீதி இல்லையா?
- இப்படி நிர்வாகத் துறை, நாடாளுமன்றத் துறை மட்டுமல்ல, நீதித்துறையின் அதிருப்தி, விமர்சனத்திற்கும் மோடி தலைமையிலான ஆட்சி உள்ளாகி, பகிரங்கமான நீதிபதிகளின் கண்டனக் கணைகளிடமிருந்தும் தப்பவில்லை என்பது எதைக் காட்டுகிறது?
1. உயர்நீதிமன்றங்களில் வழக்கு நிலுவைகள் - 60,72,720
2. உயர்நீதிமன்றங்களில் ஓராண்டுக்குமேல் வழக்கு நிலுவை 45,22,626 (74.7%).
இதற்குக் காரணம், போதிய நீதிபதிகள் நியமனம் தாமதப்படுத்தப்படுவதே!
பல மாதங்களாக ‘‘கொலிஜியம்‘’ பரிந்துரைப்படி நீதிபதிகளுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் ஒன்றிய ஆட்சியில் கிடப்பில் போட்டு வைப்பதால், இந்தத் தேக்க நிலை.
மோடி அரசின்மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் குற்றச்சாட்டு!
1. உயர்நீதிமன்றங்களில் மொத்தம் உள்ள பதவிகள் - 1114
தற்போது இருப்பவர்கள் - 774
நிரப்பப்படாமல் கிடப்பில் உள்ள பதவிகள் - 340
அதேபோல்,
2. உச்சநீதிமன்றத்தில் உள்ள பதவிகள் - 32
நிரப்பப்படவேண்டியவை - 2
- இவைபற்றி இரண்டு நாள்களுக்குமுன் மூத்த நீதிபதி ஜஸ்டிஸ் சஞ்சய் கிஷன் கவுல், ஜஸ்டிஸ் சுதான் ஹூ தூலியா ஆகிய இருவர் அமர்வு மேலே காட்டிய புள்ளி விவரங்களோடு, மிகக் கடுமையாகவே ஒன்றிய அரசின் செயல்படாத நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளது - அரசு தலைமை வழக்குரைஞரிடம்!
80 பேரை பரிந்துரைத்தது கொலிஜியம்; ஆனால், 70 பேர் நிலுவையில் இருந்தும், பல மாதங்களாகப் பதில் வரவில்லை.
ஒன்றிய பா.ஜ.க. அரசு விரைந்தும் செயல்படவில்லை; வெளிப்படைத்தன்மையை (காரணம் கூறி) விளக்கவும் முன்வரவில்லை. காரணம், வெளிப்படையாகப் புரிந்துகொள்ளக் கூடியதே! உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி புறக்கணிக்கப்படுகின்றது. பரிந்துரைக்கப்படும் பல ஒடுக்கப்பட்டவர்கள்கூட நியமிக்கப்படுவதில்லை.
10 மாதங்களாக 70 நீதிபதிகள் நியமனத்தை நிறுத்தி, கிடப்பில் வைத்துள்ள மோடி அரசின் நிலைப்பாட்டினைக் கடுமையாக விமர்சிக்கின்ற நிலை; இவ்வாட்சியின் சாதனையா? வேதனையா?நாடாளுமன்றத்தில் மசோதாக்கள்மீது விவாதம் நடத்தப்படுவதில்லை. வாக்காளப் பெருமக்களே, இந்த ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சியில் நிர்வாகத் துறை, நாடாளுமன்றத் துறைகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் பல மசோதாக்கள்மீது உரிய கால அவகாசத்துடன் விவாதித்து, வாக்கெடுப்பு நடத்தப்படாமல் அவசரக் கோலம், அள்ளித் தெளித்த நிலைதான்!
மக்களவையில் துணை சபாநாயகர் பதவியை 4 ஆண்டுகளுக்குமேல் நிரப்பப்படாமலே காலியாக வைத்து, அடுத்த பொதுத் தேர்தலை சந்திக்கும் விசித்திர ஜனநாயகம்! இவற்றுடன் பெங்களூரு வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதித்துறை அவமதிப்பு வழக்கின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பகிரங்கமாக, ஒன்றிய அரசின்மீது குற்றச்சாட்டுக் கூறி, அது ஏடுகளிலும் வந்துள்ளது.
நீதித் துறையின் பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? :
இதற்கு ஒரே பதில் - ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சியை வாக்குச் சீட்டின்மூலம் அகற்றுவதுதான்! தென்னிந்தியா ஏற்கெனவே வழிகாட்டி, பா.ஜ.க.விற்குக் கதவை மூடிவிட்டது.
2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்குப் பதிலடி கொடுப்பீர்! :
அடுத்து வட இந்தியாவும் ஆயத்தமாகி வருவதால்தான், மகளிர் மசோதா போன்ற - உடனடியாக நடைமுறைக்கு வராத ‘2032 அமல்’ என்ற புதுவித்தை என்பதைப் புரிந்துகொள்வீர்! வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் சரியான பதிலடியை கொடுப்பீர்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!