Politics
JDU கட்சியை பாஜகவோடு இணைக்குமாறு மிரட்டல் ? கர்நாடகாவில் பரபரப்பு.. குமாரசாமியின் பதில் என்ன ?
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். அதே போல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
அதனைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியோடு கூட்டணி என பாஜக தலைவர்கள் தன்னிச்சையாக அறிவித்தனர். முதலில் இதனை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி மறுத்தாலும் பின்னர் அதனை ஒப்புக்கொண்டார்.
அதே நேரம் கர்நாடகாவில் தங்களை வலுப்படுத்தும் விதமாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை பாஜகவோடு இணைக்கவேண்டும் என அக்கட்சி சார்பில் குமாரசாமியிடம் வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும், அதனை குமாரசாமி மறுத்தால் அவருக்கு பல்வேறு இடைஞ்சல்கள் அளிக்கப்படும் என மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி விளக்கமளித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "நாங்கள் ஒரு கண்ணியமான, கவுரவமான கூட்டணியைத்தான் எதிர்பார்க்கிறோம். விரும்புகிறோம். அதற்குதான் ஒப்புக் கொள்வோம். பாஜகவுடன் எங்கள் கட்சியை இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி ஒருபோதும் கட்சியை பாஜகவுடன் இணைக்கும் சூழ்நிலையும் வரவே வராது. அப்படியான தகவல்களில் உண்மை எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார்.
Also Read
-
கன மழை எச்சரிக்கை : களத்தில் இறங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
-
பூம்புகார் கைத்திறன் விருதுகள் : 227 கைவினை கலைஞர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் அமைச்சர் TM அன்பரசன்!
-
மசூதியை ஆய்வு செய்ய அனுமதி - ”மதவாதத்துக்கு துணை போகிறதா உச்சநீதிமன்றம்?” : பிருந்தா காரத் கேள்வி!
-
குடியரசுத்தலைவர் உரையில் இடம் பெறாத ’சோசலிஸ்ட்’, ’மதச்சார்பற்ற’ சொற்கள் : டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு!