Politics

“நீட் ஜீரோ என்பதை ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டு விட்டது..” : தி.க. தலைவர் கி.வீரமணி விமர்சனம் !

தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பட்டம் பெரும் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "33 % மகளிர் இட ஒதுக்கீடு கானல் நீர் போன்றது. வரும் - ஆனால் வராது என்ற நகைச்சுவையை போன்றதுதான்" என்று கேலியாக பேசினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, " தஞ்சையில் வரும் அக்டோபர் 6 ம் தேதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் ஏற்பாடுகளை துவக்கிய முத்தமிழறிஞர் கலைஞருக்கு பாராட்டு விழா நடத்திய அதே திலகர் திடலில், மகளிரை அர்ச்சகராக்கி அவர் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்தும், மகளிருக்கு உரிமை தொகை வழங்கி பழமை வாதிகளின் முதுகெலும்பை முறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

மோடி அரசு ஊழலை மறைக்க, மக்களின் வேதனைகளை மறைக்கதான் சனாதனத்தை கையில் எடுத்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது சனாதனம் குறித்து எங்கு, எவ்வாறு சொல்வது என்று இருந்த நிலையில், சனாதனம் குறித்து விளக்கிட நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

நீட் ஜீரோ என்பதை ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டு விட்டது. நீட் கொண்டு வந்தால் ஊழலை ஒழிக்க முடியும் என தெரிவித்தார்கள். ஆனால் நீட் தேர்வு மூலம் தனியார் கல்வி நிறுவனங்களும் - கனவான்களும் தான் அதிக லாபம் பெறுகின்றனர். இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாறும், காட்சி மாறும். நீட் ஜீரோ ஆகும். 33 % மகளிர் இட ஒதுக்கீடு கானல் நீர் போன்றது. வரும் - ஆனால் வராது என்ற நகைச்சுவையை போன்றதுதான்" என்றார்.

Also Read: “உறுப்பு தானம் வழங்குவோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்.. இன்று முதல் அமல்”: அமைச்சர் மா.சு !