Politics

“வடக்கேயும் ‘நீட்’ கொடுமை இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது.. பாஜகவை ஒழிப்பதே இதற்கு தீர்வு!” - கி.வீரமணி!

‘நீட்’ தேர்வில் பூஜ்ஜியம் எடுத்தாலும், மைனஸ் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சேரலாம் என்றால், எம்.பி.பி.எஸ்.சில் சேர ‘நீட்’ ஏன்? ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவக் கல்லூரியில் சேராமால் தடுப்பதுதானே - கார்ப்பரேட்டுகள் கொழுக்கத்தானே! இக்கொடுமைகளுக்கு வரும் 2024 இல் நடைபெறும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்துவதே ஒரே தீர்வு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

"‘நீட்’ தேர்வு என்பது இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் அனைத்துக்கும் ஒரே தேர்வு என்று முதலில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு - பிறகு அதன் கொடுங்கரங்கள் மருத்துவ மேற்பட்டப் படிப்புகளுக்கும் என்று ஆக்கியது - ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மற்றும் முதல் தலைமுறையினர் டாக்டர்களாக வருவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பார்ப்பன வருணாசிரமத்தின் ஒருவகையான புது அவதாரமே ஆகும்.

‘நீட்’ தேர்வில் ஊழல் நடக்கவில்லையா?

ஏற்கெனவே நேரிடையாக அந்தந்த மாநிலங்களில் மருத்துவக் கல்வித் தேர்வு நடைபெற்று வந்ததில், ஊழல் ஏதோ பெரும் அளவில் தலைவிரித்தாடியதுபோலவும், அதன்மூலம் ‘‘தகுதி, திறமை’’ உள்ள மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரவில்லை என்பதுபோலவும் போலிக் காரணங்களைக் கூறினர்.

‘தகுதி, திறமை’ என்ற பெயரால் எத்தகைய மோசடிகள் ‘நீட்’ தேர்வில் - அது தொடங்கிய 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரை நடந்துள்ளன எனவும், ஆள் மாறாட்டம் உள்பட பல கேவலமான ஊழல்முறைகளால் அதில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் வழக்குகள் பல உயர்நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டு, நீதிபதிகளால் சுட்டியும் காட்டப்பட்டுள்ளது!

வணிக முறையில் ‘நீட்’ தேர்வு தயாரிப்பா?

அதற்கான அரசு ஆணை (G.O.) ஒன்றிய அரசால் வெளியிடும்போதே, அது உலக வர்த்தகத்தின் அடிப்படையின்கீழ்தான் (GATT) வெளியிடப்பட்டது. அப்படியானால், வணிகம் போன்றே ஆக்கப்பட்டது என்று பொருள். நாம் அப்பொழுதே, தொடக்கத்தில் இதைச் சுட்டிக்காட்டினோம்.

இந்த நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டில் உள்ள ‘Non Resident Indians (NRI), Overseas Citizen of India (OCI), Persons of Indian Origin (PIO) தவிர, நேரடியாக அயல்நாட்டினருக்கு (Foreign Nationals) என்றே 2017 முதல் இட ஒதுக்கீடு செய்து, பல மருத்துவக் கல்லூரிகள் குறிப்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளைப் பணத்தை அதிகாரப்பூர்வமாகவே - சட்டப்பூர்வமாகவே சம்பளம்மூலம் பெற இதில் வழிவகை செய்யப்பட்டதோடு, ‘நீட்’ (NEET) தேர்வுக்கான பயிற்சி மய்யம் என்ற பெயரால், கார்ப்பரேட் கொள்ளை இலாபக் குபேரர்கள், ஒவ்வொரு பயிற்சி மாணவரிடமும் 3, 5, 8 லட்சம் ரூபாய் வரை வசூலித்து, பல கோடி ரூபாய் ‘‘அறுவடை’’ செய்துகொள்ள ‘நீட்’ தேர்வு அவர்களுக்கு வசதியாகக் கதவுகளை அகலமாகத் திறந்து வைத்தது.

‘நீட்’ காரணமாக தற்கொலைகள்!

தமிழ்நாட்டிலும், கருநாடகத்திலும், ஆந்திரத்திலும், அண்மையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் ‘நீட்’ தேர்வு காரணமாக ஏராளமான மாணவர்கள் மன அழுத்தத்தாலும், தோல்வி அச்சத்தாலும் தற்கொலை செய்துகொள்ளும் கொடூரம் தொடர்கதையாகி வருகிறது!

ஒன்றிய அரசோ இந்தத் தற்கொலைகளைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படவோ, இரக்கங்காட்டி இதன் மூலத்தை ஆராய முன்வரவோ இல்லாது, ‘‘மூர்க்கனும், முதலையும் பிடித்ததை எளிதில் விடமாட்டார்கள்’’ என்பதுபோன்று நடந்துகொண்டு வருகிறது!

நேற்றுமுன்தினம் (20.9.2023) ஒன்றிய அரசின் மருத்துவ சுகாதாரத் துறையின்மூலம் ஒரு விசித்திர அறிவிப்பு வெளிவந்தது! ‘‘நீட் தேர்வில் Zero Percentile பூஜ்ஜியம் மதிப்பெண், மைனஸ் மதிப்பெண் வாங்கியவர்களும்கூட, மேற்பட்டப் படிப்பில் கலந்தாய்வில் கலந்துகொண்டு மேற்பட்டப் படிப்பில் சேரலாம்‘’ என்பதே அது!

ஜீரோ பெர்சண்டைல் என்றால், பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமல்ல, அதற்கும் கீழே மைனஸ் மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் தகுதி உண்டு என்று இப்போது அறிவித்திருக்கிறார்கள். (‘நீட்’ தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் கள் உண்டு என்பதால், பூஜ்ஜியத்துக்கும் கீழும் மதிப்பெண்கள் (மைனஸ்) வழங்கப்படும்).

கார்ப்பரேட்டுகள் கொழுக்கவா?

இந்த அறிவிப்பு வெளிவந்தவுடனே நமது தி.மு.க. தலைவரும், ஏனைய தமிழ்நாட்டு சமூகநீதிப் போராளிகளான பல முற்போக்குக் கட்சியினரும்,

1. அப்படியானால், இந்த மேற்படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு எழுதவேண்டும் என்ற நிபந்தனை ஏன் இருக்கவேண்டும்?

2. ‘நீட்’ தேர்வுக்கும், இந்த மேற்பட்டப் படிப்புக்கும் இந்த முன் நிபந்தனை எதற்காக?

கார்ப்பரேட்டுகள் மாணவர்களைச் சுரண்டிக் கொழுக்கவா? அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து சம்பளக் கட்டணமாக ரூ.50 லட்சத்திற்குமேல் ‘வசதி’யாக வசூலித்துக் கொண்டு கொள்ளை ராஜ்யம் நடத்தவா? பின் எதற்காக? பூஜ்ஜியம் மதிப்பெண்கள் பெற்றாலும், மைனஸ் மதிப்பெண்கள் பெற்றாலும் ராஜ்ஜியம் நடத்தலாம் பணக்கார பெருமுதலாளிகளின் பிள்ளைகள் என்பதற்காகவா?

இப்போது அதிகாரப்பூர்வமாக அதிக சம்பளக் கட்டணம் வைத்து, அதிகாரப்பூர்வ (சட்டப்பூர்வமாக) பணமாகவே அதிக பணத்தைத் தனியார் மருத்துவக் கல்லூரியினர் பெற இது வசதி செய்கிறதா, இல்லையா?

தகுதி, திறமை என்று பேசுவோர் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்? பன்னிரெண்டு ஆண்டுகள் படித்து 100% மதிப்பெண்கள் எடுத்தாலும் தரம் இல்லை என்று சொல்லிவிட்டு, இப்போது ‘நீட்’ தேர்வில் 0%-க்கும் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும், இடம் உண்டு என்று சொல்வது தடித்தனம் அல்லவா?

யாரெல்லாம் மருத்துவ மேற்படிப்பில் சேரத் தகுதி படைத்தவர்கள்?

PG-NEET தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் எடுத்த 14 பேரும், பூஜ்ஜியத்திற்கும் கீழே மைனசில் மதிப்பெண்கள் (-40/800 வரை) எடுத்துள்ள 13 பேரும் மருத்துவ மேற்படிப்பில் சேரத் தகுதி படைத்தவர்கள் என்கிறது ஒன்றிய அரசின் அறிவிப்பு. அதாவது தேர்வு எழுதிய 2,00,517 பேரும் மருத்துவ மேற்படிப்பில் சேரலாம் என்றால் எதற்கு அந்தத் தேர்வு? கார்ப்பரேட்டுகள் கொழுக்கவா?

இளநிலைக்குச் (எம்.பி.பி.எஸ்.) சேரும்போது, ‘நீட்’, பிறகு தேர்வுகள், அதற்குப் பிறகு ‘நெக்ஸ்ட்’, அதையும் தாண்டி மேல்படிப்புக்கும் ‘நீட்’ (P.G. NEET) என்றால், அவர்கள் தேர்ந்தெடுத்த ‘நீட்’ ‘தகுதி’யாளர்கள்மீதே அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்று பொருளா? அல்லது ஒவ்வொரு இடத்திலும் கோச்சிங் சென்டர் கொள்ளைகளுக்கு வகை செய்து கொடுக்கவேண்டும் என்ற கொள்ளை வணிக நோக்கமா?

மருத்துவக் கல்லூரி நடத்தும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தவர்கள் கூட, PG NEET தேர்வில் தோல்வியடைகிறார்கள், குறைந்த மதிப்பெண்கள் எடுக் கிறார்கள் என்றால் என்ன வகையான சதி இது?

உலக நாடுகளில் பிரபல டாக்டர்களாக - இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பரிணமிப்பது ‘நீட்’ தேர்வு எழுதியா?

தகுதி, திறமை பேசும் இந்த உயர்ஜாதி உன்மத்தர் களைக் கேட்கிறோம், இன்று பல வெளிநாடுகளில் அமெரிக்கா போன்ற நாடுகளில் சர்ஜன் - ஜெனரல் - தலைமை மருத்துவ ஆலோசகர்கள், ஆளுமைப் பொறுப்பில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக தென் னாட்டவரில் ‘நீட்’ தேர்வு எழுதியதாலா அந்தப் பதவிக்குத் தகுதியாகி உள்ளார்கள்?’’ இல்லையே! நம் மருத்துவக் கல்லூரிகளில் படித்து, ‘நீட்’ தேர்வு எழுதாமலே சென்று படித்தவர்கள்தானே!

வரும் தேர்தலில் பி.ஜே.பி.யை ஆட்சியை ஒழித்தால்தான் விடிவு பிறக்கும்!

ஒடுக்கப்பட்டவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாக, கிட்டாப் பொருளாக ஆகும் உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே இந்த ‘நீட்’ என்ற பன்னாடைத் தேர்வு முறை. இதனை ஒழிக்க ஓர் அரிய வாய்ப்பு வரும் பொதுத் தேர்தல் (2024). அதில் இந்த பார்ப்பனிய மேலாண்மை ஆதிக்கம் கொழுந்துவிட்டு எரியும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசை அகற்றிவிட்டால், எல்லாப் பிரச்சினைகளுக்கும் (‘நீட்’ தேர்வு ஒழிப்பு உள்பட) உரிய விடியல் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயம் ஏற்படும்! வடக்கேயும் ‘நீட்’ கொடுமை இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது!

Also Read: “இது உங்களுக்கான உரிமைத்தொகை, ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை”: 1.06 கோடி மகளிருக்கு முதலமைச்சர் கடிதம்!