Politics

தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்.. வெளியான கருத்து கணிப்பு முடிவு.. முழு விவரம் என்ன ?

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெறும் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து 9 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது, அங்கு இந்த வருடன் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்கு ஜன்மத் என்ற அமைப்பு நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது. 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 59-61 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என கூறப்பட்டுள்ளது.

அதே நேரம் ஆளும் பிஆர்எஸ் கட்சி 39 முதல் 41 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்றும், பாஜகவுக்கு 10-11 இடங்களும் மஜ்லீஸ் கட்சிக்கு 5-6 இடங்களும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு 42% சதவிகிதம் வாக்குகளும், பிஆர்எஸ் கட்சிக்கு 34% வாக்குகளும், மஜ்லீஸ் கட்சிக்கு 10% வாக்குகளும் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: டிரம்ப் இறந்துவிட்டார்.. அதிகாரபூர்வ பக்கத்தில் வந்த செய்தி.. ஆடிப்போன அமெரிக்கர்கள்.. நடந்தது என்ன ?