Politics
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை ரகசியமாக தாக்கல் செய்தது ஏன்?: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய கனிமொழி MP
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப். 18 ஆம் தேதி தொடங்கியது. வரும் செப் 22-ம் தேதி வரை இக்கூட்டத் தொடர் நடைபெறுகிறது. முதல்நாள் கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால விவாதத்தில் அனைத்து கட்சி எம்.பி-களும் பங்கேற்று உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்குப் பிரியா விடை கொடுக்கப்பட்டு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் கனிமொழி எம்.பி பேசு தொடங்கிய உடன் பா.ஜ.க உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அப்போது இதுதான் நீங்கள் பெண்களை மதிக்கும் தன்மையா? என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். பின்னர் தொடர்ந்து பேசிய அவர், " மகளிர் மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் பா.ஜ.க இந்த மசோதாவை அரசியலாக்குகிறது.
1996ம் ஆண்டு மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா முதல்முறையாக நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதும் தி.மு.க ஆதரித்தது. பின்னர் வாஜ்பாய் ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எல்லாம் மசோதா நிறைவேற்றப்படவில்லை.
இதையடுத்து மன்மோகன் சிங் ஆட்சியில்தான் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. தற்போது 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. அப்போதும் நான் பேசினேன். இப்போதும் நான் பேசுகிறேன். ஆனால் மசோதா சட்டமாகவில்லை.
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை பா.ஜ.க தனது அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது. மசோதாவை ரகசியமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த மசோதா குறித்து உறுப்பினர்கள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற ஊழியர்கள் உடை மாற்றப்பட்டதுபோல் திடீரென மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார்கள்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல் முதலில் நீதிக்கட்சி ஆட்சியில் மகளிருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது தென்மாநிலங்களைப் பெரிதும் பாதிக்கும்.
ஆண்கள் தைரியத்தை வெளிப்படுத்தினால் நமது சமூகம் ஏற்கிறது. ஆனால் பெண் வெளிப்படுத்தினால் ஏற்க மறுக்கிறது. இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட கட்சி பா.ஜ.க உங்களிடம் நான் கேட்கிறேன். காளி தைரியமான தெய்வம் இல்லையா? அப்போது பெண்கள் ஏன் தைரியமாக இருக்கக்கூடாது?. சுதந்திரபோராட்டத்திலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பங்கேற்றுள்ளனர். நமது நாட்டின் பிரதமராகப் பெண்கள் இருந்துள்ளனர். மாநில முதல்வராகப் பெண்கள் இருந்துள்ளனர். இருக்கின்றனர். இந்த மசோதா பெண்களுக்கான சலுகை அல்ல. உரிமை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!