Politics
சீக்கியர் கொலை விவகாரம்.. கனடா தூதர் 5 நாட்களுக்குள் வெளியேற இந்திய அரசு உத்தரவு.. முழு விவரம் என்ன ?
இந்தியாவில் ஒரு காலத்தில் சீக்கியர்களுக்கு என்று தனிநாடு (காலிஸ்தான்) கோரிக்கை தீவிரமாக இருந்தது. அதிலும் பிந்திரன்வாலே என்ற தலைவரின் கீழ் பல்வேறு சீக்கியர்கள் அவரின் கீழ் இந்த போராட்டத்தில் இணைந்தனர். ஒரு கட்டத்தில் இவர்கள் சீக்கியர்களின் புனித தளமான பொற்கோவிலை தங்கள் போராட்ட களமாக கொண்டு செயல்பட்டனர்.
இதன் காரணமாக அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற ராணுவ நடவடிக்கை மூலம் பொற்கோவில் மீது தாக்குதல் நடத்தி பிந்திரன்வாலே உள்ளிட்ட போராட்டக்காரர்களை கொலை செய்தது. ஆனால் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலில் நடைபெற்ற இந்த தாக்குதல், சீக்கியர்களை புண்படுத்தியதாக கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்தியாவில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை முடிவுக்கு வந்தாலும் இந்தியாவுக்கு வெளியே சீக்கியர்கள் அதிகம் வாழும் கனடாவில் அந்த கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
சீக்கியர்கள், கனடா நாட்டு மக்கள் தொகையில் செல்வாக்கு செலுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அவர்களின் இந்த கோரிக்கையால் இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையே பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன. அந்த முதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஜூன் 18-ம் தேதி அன்று காலிஸ்தான் கோரிக்கை குறித்து போராட்டங்களை நடத்திவந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய கனடா அரசு, நிஜ்ஜாரின் கொலையில் இந்திய உளவுத்துறைக்கு பங்கு இருக்கலாம் என சந்தேகித்தது.
அதனைத் தொடர்ந்து கனடா நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கும், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகன் கொல்லப்பட்டதன் பின்னணியில் எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தின் தலையீடும் இருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது" என்று கூறினார். அதோடு நிற்காத கனடா அரசு அந்நாட்டுக்கான இந்திய தூதர் உடனடியாக வெளியேறவேண்டும் என்று அறிவித்தது.
ஆனால் கனடா அரசின் இந்த குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்த நிலையில், இது குறித்து விளக்கமளிக்குமார் இந்தியாவுக்கான கனடா தூதருக்கு சம்மன் அனுப்பியது. அதனைத் தொடர்ந்து அவர் வெளியுறவுத் துறை அமைச்சராகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா தூதர் 5 நாட்களுக்குள் வெளியேறவேண்டுமென இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது .
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!