Politics

பெரியார் தொடங்கிவைத்த கோரிக்கை... மாறுமா பெண்களின் நிலை ? 'மகளிர் இடஒதுக்கீடு மசோதா' கடந்துவந்த பாதை !

இந்திய சமூகம் கடந்த 2000 ஆண்டுகளாக சாதிய பாகுபாடுகளால் சிக்கிவருகிறது என்றால் உலகளவில் பாலின பாகுபாடு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதன் காரணமாக உலகம் முழுவதும் பெண்கள் ஒடுக்கப்படுபவர்களாகவும், ஆண்களில் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்துவருபவர்களுமாகவே இருந்து வந்தனர்.

ஆனால், 17-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரென்சு புரட்சி காரணமாக பெண்களில் நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொழிற்புரட்சி சமூகத்தில் பெண்களின் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. தொழிற்புரட்சி யுகத்தில் அதிக அளவு தொழிலாளர்கள் தேவைப்பட்டதால் பெண்களும் வீட்டில் இருந்து வெளியே வந்து பல்வேறு தொழில்கள் பணிபுரிந்தனர்.

அதன்பின்னர் இரண்டு உலகப்போர்கள் காரணமாக பெண்களின் வாழ்வில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டன. போரில் கலந்துகொண்ட ஏராளமான ஆண்கள் தங்கள் உயிரை இழந்த நிலையில், அதுவரை ஆண்கள் மட்டுமே செய்யமுடியும் எனக் கருதப்பட்ட பல்வேறு வேலைகளை பெண்களும் செய்து, ஆண்களுக்கு எந்த வகையிலும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தனர்.

இதன் காரணமாக பெண்களுக்கு சமூகத்தில் உயரிய அந்தஸ்து ஏற்பட்ட நிலையில் கல்வி, மருத்துவம்,விளையாட்டு என அனைத்து துறையிலும் பெண்கள் தங்கள் கால்தடத்தை பதித்தனர். அதோடு அரசியலையும் பெண்கள் விட்டுவைக்கவில்லை. பல்வேறு பெண்கள் அரசியலில் ஈடுபட்டு பல்வேறு அரசியல் பதவிகளை வகித்தனர்.

இந்த சூழலில் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற குரல் பரவலாக எழுந்தது. அந்த வகையில் பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு பல்வேறு நாடுகளிலும் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் இந்தியாவிலும் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்டது.

அதில் பெரியார் முதன்மையானவராக திகழ்ந்தார். கடந்த 1929ம் ஆண்டில் பெரியார் அவர்களால், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு பகுதியில் நடத்தப்பட்ட சுயமரியாதை மாநாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் தளத்தில் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் அம்பேத்கரால் அனைத்து பெண்களுக்கும் வாக்குரிமை அழைக்கப்பட்டாலும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவானதாகவே இருந்தது. இதன் காரணமாக 1974ம் ஆண்டில் இந்தியாவில் பெண்களின் நிலை குறித்த ஆய்வு செய்த குழு உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என பரிந்துரைத்தது.

அதனைத் தொடர்ந்து 1993ம் ஆண்டில்அரசியலமைப்புச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். எனினும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு ஏற்பது கானல் நீராகவே இருந்தது.

இந்த சூழலில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களிளும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை உச்சம் பெற்றது. அதன் காரணமாக கடந்த 1996ஆம் ஆண்டு ’மகளிர் இடஒதுக்கீடு மசோதா’ முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆட்சிக் காலத்தில் முதல்முறையாக கொண்டுவரப்பட்டது. அரசியல் சட்டத்தின் படி இது 3-ல் 2 பங்கு ஆதரவை இந்த சட்டதிருத்தம் பெறவேண்டியிருந்த நிலையில், சில கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக போதிய ஆதரவைப் பெறாமல் தோல்வியை சந்தித்தது.

அதன்பின்னர் 1998-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் இந்த சட்டமசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் தோல்வியடைந்தது. அதோடு 1999, 2002 மற்றும் 2003 என அடுத்தடுத்த ஆண்டுகளிலும் காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக ஆதரவோடு இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் மீண்டும் மீண்டும் போதிய ஆதரவு இல்லாததால் மசோதா தோற்கடிக்கப்பட்டது.

பின்னர் 2008ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மசோதாவை நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா 2010-ம் ஆண்டு மாநிலங்களவையில் 186க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும் மக்களவையில் போதிய ஆதரவு இல்லாததால் அப்போதும் சட்டமாகவில்லை.

இந்த நிலையில், 13 ஆண்டுகளுக்கு பின்னர் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு, ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் , நாடாளுமன்றத்தில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்த மசோதா இந்த முறை நிச்சயம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிறைவேற்றப்பட்டால் அது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ISRO-வின் திட்டங்களுக்கு உதவிய அரசு ஊழியர்கள்.. 18 மாதமாக ஊதியம் வழங்காததால் கூலி வேலை செய்யும் சோகம் !