Politics

“அங்கிருப்பது புராணங்கள் மட்டுமே.. மோடி விட்டு செல்வது இதைதான்” - நாடாளுமன்றத்தில் ஆவேசமான சு.வெங்கடேசன்!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் பழைய நாடாளுமன்ற கட்டத்தில் கூட்டம் நடைபெற்றது.

காலை தொடங்கிய இந்த கூட்டத்தொடர், இன்று தான் பழைய கட்டடத்தில் நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் என்பதால், 75 ஆண்டுகால வரலாறு குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்து உரையாற்றினார். இதைத்தொடர்ந்து பல எம்.பிக்கள் பேசினர். அப்போது முன்னாள் பிரதமர்களையும், இந்நாள் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு விமர்சித்தனர்.

அந்த வகையில் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., சு. வெங்கடேசன் எந்த விவாத கூட்டத்திலும் பங்கு பெறாத பிரதமர் மோடியை விமர்சித்து பேசினார். இதுகுறித்து அவர் பேசியத்தில் முக்கியமானவை பின்வருமாறு :

"இந்த அவையுடைய மேன்மை, கட்டடமோ, கட்டட கலையோ சார்ந்தது அல்ல; அது இந்த அவை எடுத்த முடிவுகள் சார்ந்தது. இந்த அவைதான் மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியது; மன்னர்மானியத்தை ஒழித்தது; பொதுத்துறை எனும் நவீன கோயில்களை உருவாக்கியது.

பன்முகப்பட்ட, அனைத்து மொழிகளுகளுக்குமான சமத்துவ இந்தியாதான் நம் முன்னோர்கள் கண்ட கனவு. இந்த அவை அரசியல் சாசனத்தின் நினைவுகள் மட்டுமல்ல; விடுதலை போராட்டங்கள் தழும்புகள் நிறைந்த அவை. இந்த அவை முழுவதும் விடுதலை போராட்டத்தின் தலைவர்கள் காந்தி, அம்பேத்கர், நேரு என்று அனைவரது சிலைகளும், உருவங்களும் நிறைந்திருக்க கூடிய இந்த அவையை விட்டுவிட்டு நாம் ஒரு புதிய இடத்திற்கு செல்ல இருக்கிறோம்.

அரசியல் சாசனத்தின் நினைவுகளை அகற்றிவிட்டு சாணக்கியனின் உருவம் படைத்த ஒரு இடத்தை தேடி இந்தியா கொண்டு செல்லப்படுகிறது. சாணக்கியத்துக்கும், ஜனநாயகத்துக்கு என்ன சம்மந்தம்? தனது முதல் தேர்தலிலேயே அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்து ஜனநாயகத்தின் உச்சத்தை தொட்ட ஒரு அவையிலிருந்து முடியாட்சியின் கோரவடிவத்தை எழுத்திலே வார்த்த சாணக்கியனின் முழு உருவம் பொறிக்கப்பட்ட அவைக்கு செல்கிறோம்

பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் விடுதலை போராட்டத்தின் நினைவுகள் இருக்கிறது என்றால், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் புராணங்களின் நினைவுகளாக இருக்கிறது. நாடாளுமன்ற படிக்கட்டை தொட்டு வணங்கிவிட்டு வந்தவர். இங்கே இருந்து வெளியே செல்லும் போது நீங்கள் எதை விட்டுவிட்டு செல்கிறீர்கள்?

எத்தனையோ பிரதமர்கள் இங்கு அமர்ந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து விவாதத்தில் பங்கேற்றுள்ளார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு ஒருமுறை கூட பதில் அளிக்காத பிரதமர் என்ற நினைவை விட்டுவிட்டுதான் நீங்கள் செல்கிறீர்கள். கடந்த காலங்களில் இந்த தேசத்தில் நிகழ்ந்த பல பிரச்சினைகளுக்கு இந்த அவை முடிவுக்கட்டியுள்ளது. ஆனால் சமீப காலத்தில் இந்த தேசத்தின் பல பிரச்சினைகள் இந்த அவையில் இருந்துதான் துவங்குகிறது.

நாடாளுமன்றம் என்பது புதிய கட்டடம் அல்ல; அது பின்பற்றப்படுகிற கோட்பாடும், ஜனநாயகத்திற்கு அளிக்கப்படும் மதிப்பிலும்தான் அதன் உயிர் இருக்கிறது. அந்த உயிரை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை அல்ல; 140 கோடி மக்களும் காப்பாறுவார்கள் என்ற புதிய அவைக்கு நாங்கள் செல்கின்றோம்!"

Also Read: ”பெருமை பேசி மக்களை மேலும் கொடுமைப்படுத்தாதீர்கள்” : மோடி அரசை விமர்சித்த மல்லிகார்ஜூன கார்கே!