Politics

கர்நாடகா : சீட் தருவதாக ரூ.6 கோடி வாங்கி மோசடி.. சிக்கிய பாஜக ஆதரவாளர்கள்.. தலைமறைவான மடாதிபதி !

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்த தேர்தலில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூரை சேர்ந்த கோவிந்த் பாபு பூஜாரி என்ற தொழிலதிபர் பாஜக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பியுள்ளார்.

இதற்காக இந்து ஜகர்ன வேதிகே அமைப்பின் நிர்வாகியானா சைத்ரா குந்தாபுராவை சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளார். உடனே பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர்கள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சைத்ரா குந்தாபுரா கூறி, பணம் கொடுத்தால் பாஜக சார்பில் தேர்தலில் சீட் வாங்கலாம் என்று கூறியுள்ளார்.

Chaitra Kundapur

மேலும், உடுப்பி பாஜக இளைஞர் அணி செயலாளர் ககன் கடூர், மஹா சமஸ்தானா மடாதிபதி அபினவ ஹலஸ்ரீ சுவாமி, ஆர்எஸ்எஸ் பிரமுகர் ரமேஷ் நாயக் ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர்களிடம் பணம் கொடுத்தால் சீட் கிடைக்கும் எனக் கூறியதோடு முதற்கட்டமாக கோவிந்த் பாபு பூஜாரியிடமிருந்து ரூ.50 லட்சமும், அடுத்ததாக ரூ.1.5 கோடியும் சைத்ரா குந்தாபுரா வாங்கியுள்ளார்.அதோடு நிற்காமல் ரூ.3 கோடி வரை பாபு பூஜாரியிடமிருந்து வாங்கியுள்ளார்.

ஆனால், வேட்பாளர் பட்டியலில் பாபு பூஜாரியின் பெயர் இடம்பெறாமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைத்த பாபு சைத்ரா குந்தாபுராவை சந்தித்து தான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் ரௌடிகளை வைத்து கொலை செய்துவிடுவேன் என அவரை சைத்ரா குந்தாபுரா மிரட்டியுள்ளார்.

இதன் காரணமாக வேறு வழியின்றி கடந்த 8-ம் தேதி காவல் நிலையத்தில் இதுகுறித்து பாபு பூஜாரி புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று முன்தினம் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சைத்ரா குந்தாபுரா, ககன் கடூர், விஷ்வநாத் ஜி, ரமேஷ் நாயக், தன்ராஜ், ஸ்ரீகந்தா நாயக் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மடாதிபதி அபினவ ஹலஸ்ரீ சுவாமிகளை போலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.