Politics

ம.பி தேர்தல்.. பாஜகவை எதிர்த்து களமிறங்கும் முன்னாள் RSS நிர்வாகிகள்.. தேர்தலில் போட்டி என அறிவிப்பு !

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மை பலம் பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.

ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி அலைவே தொடர்ந்து எழுந்து வருகிறது.

அங்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு வெளியாகியுள்ள கருத்து கணிப்பு முடிவுகளில் பாஜகவுக்கு 55 இடங்கள்தான் கிடைக்கும் என்றும் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அங்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முன்னாள் நிர்வாகிகள் ஒன்றுசேர்ந்து பாஜகவுக்கு எதிராக போட்டியிடுவோம் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபய் ஜெயின் என்பவர் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு விலகியவர்கள் ஒன்று கூடி ஜன்கித் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர்.

இவர்கள் பாஜக மீது கடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வரும் மத்திய பிரதேச சட்டமன்றத்தேர்தலில் பாஜகவை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளர். இது குறித்து பேசிய அபய் ஜெயின், ”நாங்கள் உண்மையான இந்துத்துவா கோட்பாட்டை செயல்படுத்த விரும்புகிறோம். பாஜகவின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்தவர்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

Also Read: செய்தியாளர் சந்திப்பை நடத்தாத மோடி.. வியட்நாம் சென்று விமர்சித்த அமெரிக்க அதிபர்.. முழு விவரம் என்ன ?