Politics

ஜி-20 மாநாடு.. பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த மறுத்த மோடி.. அமெரிக்கா கோரிக்கையை நிராகரித்த ஒன்றிய அரசு !

கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்துப்பேசினார். பின்னர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.அந்த சமயத்தில் பத்திரிகையாளர்கள் மோடியிடம் இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அப்போது வால் ஸ்ட்ரீட் ஜர்னலைச் சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சபரினா சித்திக் என்ற பத்திரிகையாளர், இந்தியாவில் சிறுபான்மையினர் பாதிக்கப்புக்கு உள்ளாவதாக பிரதமர் மோடியிடம் கேள்வியெழுப்பினார்.

இதனை கேட்டதும் முதலில் ஆடிப்போன பிரதமர் மோடி, திக்கி திணறி ஒரு பதிலை தயார் செய்து ஜனநாயகம் தங்களது டி.என்.ஏ-வில் உள்ளதாகவும், அனைவரும் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பதாகவும் பதிலளித்தார். அதோடு அந்த சந்திப்பு முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து ஆன்லைன் வழியாக ஒன்றிய அரசின் சில அதிகாரிகள் மற்றும் இந்தியர்கள் வாயிலாக பத்திரிகையாளர் சபரினா சித்திக்கிற்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், தற்போது ஜி-20 மாநாடு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், மாநாடு நடைபெறும் முன்னர் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் சந்தித்துப்பேசினர். வழக்கமாக இருநாட்டு தலைவர்கள் பேசும்போது அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பை அமெரிக்க அதிபர் மற்றும் அவரோடு இருக்கும் பிற நாட்டு தலைவர் ஆகியோர் நடத்துவது வழக்கம்.

அதன்படி இந்த சந்திப்பின்போதும் இது குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்த அமெரிக்க அரசு சார்பில் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த செய்தியாளர் சந்திப்புக்கு இந்திய அரசு அனுமதி மறுத்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், " ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் நிலையில், அதன் ஒரு பகுதியாகவே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. பல தலைவர்கள் அங்கு இருந்ததால் சில பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.அங்கே (இந்தியாவில்) அமெரிக்க ஊடகங்களுக்குச் சரியான பத்திரிகை அணுகலை உறுதி செய்ய வெள்ளை மாளிகை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது என்பதை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். எனினும் அமெரிக்க அரசு முயன்றும் இறுதிவரை பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறாமல் வெறும் கூட்டறிக்கை மட்டுமே ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஜி20 கூட்டமைப்பில் இணைந்த ஆப்பிரிக்க யூனியன்.. ஜி21 ஆக பெயர்மாற்றம் பெற்ற கூட்டமைப்பு.. முழு விவரம் என்ன?