Politics

இடைத்தேர்தலில் படுதோல்வி.. பாஜகவின் கோட்டையில் விழுந்த ஓட்டை.. உ.பி-யில் சரியும் பாஜகவின் செல்வாக்கு !

உத்தர பிரதேசம், ஜார்கண்ட், மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளா, திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்குச் செப்டம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இதையடுத்து இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

இதில் 4 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அபார வெற்றிபெற்றனர். அதிலும், பாஜகவின் கோட்டை எனக் கருதப்படும் உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்தும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது அரசியல் அரங்கில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் கோசி சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் தாரா சிங் சவுகான் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதன் காரணமாக அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், பாஜக சார்பில் தாரா சிங் சவுகான் போட்டியிட்ட நிலையில், அவரை 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுதாகர் சிங் தோற்கடித்தார்.

இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் தாரா சிங் சவுகானுக்கு ஆதரவாக உத்தர பிரதேச துணை முதல்வர் உள்ளிட்ட பெரும்பான்மை அமைச்சர்கள் தீவிர பிரட்சரத்தில் ஈடுபட்ட நிலையிலும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் தெற்கு உத்தரபிரதேசத்தில் பாஜகவின் ஆதரவு தளம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதற்கு முன்னர் நடைபெற்ற சட்டமன்ற, மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் பாஜக தெற்கு உத்தரபிரதேச பிராந்தியத்தில் குறைவான வாக்குகளையே பெற்றது. இங்கு 122 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில், இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுவதாக வடஇந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Also Read: முன்னோர்கள் கட்டிய கோவில் கருவறையில் நுழைய முயன்ற ராணி.. அர்ச்சகர்களால் வெளியே தள்ளிவிடப்பட்ட அதிர்ச்சி !