Politics

"இமாச்சல் இயற்கை பேரிடருக்கு அங்குள்ளவர்கள் இறைச்சி சாப்பிடுவதே காரணம்"- ஐஐடி இயக்குநர் சர்ச்சை கருத்து !

இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தங்கள் இந்துத்துவ கொள்கைகளை தொடர்ந்து திணித்து வருகிறது. அதிலும் கல்வி நிலையங்களில் இந்த கொள்கைகளை திணிப்பதில் பாஜக மிகவும் உறுதியாக உள்ளது. இதன் காரணமாக கல்வி நிலையங்களில் அதிகாரிகளாக இந்துத்துவ கொள்கை கொண்டவர்களையே நியமித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தங்கள் கொள்கைகளை பகிரங்கமாக பாடத்திட்டங்களில் திணித்து வருகிறது. அதோடு முக்கிய பொறுப்பில் இருக்கும் இது போன்ற அதிகாரிகள், பல்வேறு தருணங்களில் பிற்போக்கு கருத்துகளை கூறி, தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இதனால் உலக அரங்கில் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.

அந்த வகையில் இறைச்சி சாப்பிட்டால் இயற்கை பேரிடர்கள் நிகழும் என ஐஐடி இயக்குநர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை ஏற்பட்டு அடிக்கடி இயற்கை பேரழிவு ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்திலும் கடந்த மாதம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு 50 பேர் வரை இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த இயற்கை சீற்றத்துக்கு மனிதர்கள் இறைச்சி சாப்பிடுவதே காரணம் என ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்ட ஐஐடி இயக்குனர் லக்ஷ்மிதார் பெஹெரா கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களிடையே பேசிய அவர், சுற்றுச் சூழல் மனிதர்கள் மற்றும் விலங்குகளுடன் ஒரு கூட்டு வாழ்வை கொண்டுள்ளது

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவுகள், மேக வெடிப்புகள், பெரு வெள்ளம் என அடிக்கடி பேரழிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் மக்கள் இறைச்சி சாப்பிடுவதுதான் விலங்குகளை நாம் கொடுமைப் படுத்துவதாலேயே இவ்வாறு நடக்கிறது. இறைச்சி சாப்பிடுபவர்கள் நல்ல மனிதர்களே இல்லை நல்ல மனிதர்களாக மாற நீங்கள் இறைச்சி சாப்பிடுவதை கைவிட வேண்டும்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: பா.ஜ.க.வின் தேசீய சீலர்கள் ‘இந்தியா’ என்ற சொல்லையே தேச விரோத சொல்லாக்கிவிட்டார்கள் - முரசொலி விமர்சனம் !