Politics

ஜி-20 மாநாடு : குடிசைகளை துணியால் மறைத்த ஒன்றிய அரசு.. குஜராத் மாடலை டெல்லியில் காட்டும் பாஜக அரசு !

ஆண்டுதோரும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். அந்த வகையில் இந்த முறை இந்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பு மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாட்டில் ஒன்றிய அரசு தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகிறது. மேலும், டெல்லியின் முக்கிய இடங்களை அழகு படுத்தி வருகிறது.

அதே நேரம் வழக்கம் போல பாஜகவின் செயல்படான குடிசை பகுதிகளை மறைக்கும் செயலையும் ஒன்றிய அரசு செய்துள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள குடிசை பகுதிகள் விளம்பர பதாகைகள் மூலமும், துணிகளைக் கொண்டும் மறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஜி-20 வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கான செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றபோதும் இதே போன்று குடிசைகள் மறைக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த பகுதிகள் மேம்படுத்தப்படாமல் தற்போதும் அதே போல மீண்டும் மறைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு வருகை தந்திருந்த போதும், இதே போல அஹமதாபாத்தின் குடிசை பகுதிகள் துணிகளை கொண்டு மறைக்கப்பட்டிருந்தன. மோடி அரசின் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஜி-20 கூட்டமைப்பின் முக்கியத்துவம் என்ன? இந்தியாவுக்கு தலைமைபொறுப்பு கிடைத்தது எப்படி? முழு விவரம் உள்ளே!