Politics
பா.ஜ.க.வின் அதிகார ஆட்டம் முடிவை நெருங்கிவிட்டது.. “Count down Started” -சிலந்தி கட்டுரை !
“கவுண்ட் டவுன் ஆரம்பமாகி விட்டது”
“Count down Started”
ஆம்; பொய்யை மூலதனமாக்கி, பொய்யிலேயே வாழ்ந்த பொய்யர் ஆட்சியின் முடிவு காலத்துக்கு…
“கவுண்ட் டவுன் ஸ்டார்டட் ”.
ஜனநாயக நெறிமுறைகள் அத்தனையையும் அழித்தொழித்திட்ட சர்வாதிகாரக் காட்டாட்சியின் ஆட்டத்தை அடக்கிட,
“கவுண்ட் டவுன் ஸ்டார்டட் ”.
மதச்சார்பற்ற நாட்டில் மதவெறிகளை மறைமுகமாகத் தூண்டி, நாட்டையே கலவர பூமியாக்கிடும் மதவெறியர்களுக்கு தூபம் போட்ட ஒரு மதவெறி ஆட்சியின் அந்திமத்துக்கு,
“கவுண்ட் டவுன் ஸ்டார்டட் ”.
“அச்சே தின்” என உயர்த்திய இரு கைகள் 9 ஆண்டுகள் கடந்த பின் அதே “அச்சே தின்” என்று அதே திக்கில் உயர்கிறதே தவிர, அச்சே தின்னை மக்கள் காணவில்லை; ‘ஜும்லா’ (வாயளவில் வடை சுட்ட) வாக்குறுதிகள்தான் அவை என்று இன்று கூச்ச நாச்சம் சிறிதுமின்றி கூறிடும் போலிகள் ஆட்சிக்கு,
“கவுண்ட் டவுன் ஸ்டார்டட் ”.
மொத்தமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு ஈவு இரக்கமற்ற கொடுங்கோலர்களின் தான்தோன்றி தர்பாரின் இறுதிச் சடங்குக்கு,
“கவுண்ட் டவுன் ஸ்டார்டட் ”.
மும்பையில் நடைபெற்ற INDIA (இந்தியா) கூட்டணியின் கூட்ட முடிவுகளுக்குப் பிறகு கழகத் தலைவர் தளபதி ஆற்றிய உரையில் “கவுண்ட் டவுன் ஆரம்பமாகிவிட்டது” – என்று உறுதியுடன் உரைத்த சொற்களை சுலபமாகப் புறந்தள்ளி ஆளும் பா.ஜ.க.வால் கடந்து சென்று விட முடியாது!
பா.ஜ.க.எனும், இந்த ஜனநாயக விரோத, மதவெறி கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்; நம்மிடையே உள்ள மாச்சர்யங்களைத் துறந்து, யார் இந்தியாவை ஆள வேண்டும் என்பதை விட, யார் இந்தியாவை ஆளக்கூடாது என்ற முடிவோடு ஒன்றிணைவோம்! அப்போதுதான் இந்திய ஜனநாயகம், மதச்சார்பின்மை போன்ற இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் காப்பற்றப்படும்; ஏன்? இந்தியாவே சிதறுண்டு போகாமல் இருக்க வேண்டுமானால், “யார் ஆளக்கூடாது” என்ற ஒற்றை இலக்கில் ஒன்றாவோம்; என்று கழகத் தலைவர் தளபதி பல நேரங்களில் வலியுறுத்தி வந்தார்!
தலைவர் தளபதி விதைத்த விதை முளைத்து வளர்ந்தால், இந்தியாவுக்கு விடிவு காலம் ஏற்படும் என்று எண்ணியோர் பலர்!
விதை முளைத்து எழாது மண்ணிலேயே மக்கிவிடும் என இறுமாந்திருந்தோர், ஏளனப் பார்வை வீசியோர் ஏராளம்! அட்டதிக்கு பாலகர் போல எதிரும் புதிருமாக இருக்கும் அணிகள் ஒன்றிணையுமா? மம்தா பானர்ஜிக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஒத்து வருமா? காங்கிரஸ் அங்கு தலை எடுக்க மம்தா ஒருக்காலும் அனுமதிக்க மாட்டார் என்று எண்ணி இறுமாந்திருந்தோர் தலையிலே இடி இறங்கி விட்டது!
ஆம்; கவுண்ட் டவுன் ஸ்டார்டட்!
கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரசுக்கு இடம் கொடுப்பார்களா? இ.காங், கம்யூனிஸ்ட்டுகளோடு ஒத்துப் போக வாய்ப்பே இல்லை; இந்த நிலையில் INDIA (இந்தியா) கூட்டணி கரை சேருமா? என்று கருதியவர்களை, மும்பை கூட்டம் மூச்சுத் திணறவைத்து விட்டது!
ஆம்; கழகத் தலைவர் தளபதி கூறிய, “கவுண்ட் டவுன் ஆரம்பமாகிவிட்டது!”
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் என்ற மூன்று பெரும் சக்திகள் இணையும் என்பது கனவிலே கூட நடக்காத காரியம்! என்ற அரசியல் நோக்கர்கள், ஆய்வாளர்கள் அத்தனை பேரின் கணக்குகளையும் தவிடுபொடியாக்கி, மூன்று கட்சிகளின் தலைவர்களும் ஓரணியில்,அதாவது பாசிச, பி.ஜே.பி. அரசு அகற்றப்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் ஒன்றாகி நிற்கின்றனர்.
“உத்திரப்பிரதேசத்தில் அகிலேசும், காங்கிரசும் ஒரே அணியில் அணிவகுப்பார்களா? அணிவகுக்க முடியுமா?” என எண்ணியிருந்தோரின் கனவுகள் எல்லாம், ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் நடத்திடும் இந்த ஒருங்கிணைப்புக் கூட்டங்களால் தவிடுபொடியாகி விட்டன.
‘கவுண்ட் டவுன் ஆரம்பமாகிவிட்டது’ என, இதனை எல்லாம் கண்டுதான் கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் கூறினார்!
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் பா.ஜ.க. தலைமையில் இயங்கும் அரசு ஆடிய ஆட்டம் முடிவுக்கு வர,
“கவுண்ட் டவுன் ஸ்டார்டட் ”.
‘இந்தியா’ அணியின் ஒருமித்த குரல், ஆளும் அதிகார வர்க்கத்தின் அடி வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துவிட்டது! அதன் அறிகுறிகள் வெளிவரத் தொடங்கிவிட்டன! இறக்கமும், இரக்கமுமின்றி ஏறிக் கொண்டிருந்த சமையல் எரிவாயு விலையில் திடீரென சிறிய இறக்கம்!
இந்த அறிவிப்பால் மக்கள் ஏமாறவில்லை! ஏறிக்கொண்டே இருக்கும் பெட்ரோல் – டீசல் விலை தேர்தல் நெருங்கும் நேரங்களில், சிறிது காலம் ஒரே புள்ளியில் நிற்பதும், தேர்தல் முடிந்த பின் ஏறுவதையும் கடந்த பத்தாண்டு காலமாக பலமுறை பார்த்தவர்கள்; எத்தர்களை நம்புவார்களா?
இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் சந்தேகிக்கத் தொடங்கிவிட்டனர் ! ஏறத்தாழ கடந்த பத்தாண்டு காலமாக நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஏறிக்கொண்டிருந்த சமையல் எரிவாயு, தேர்தல் நெருக்கத்தில் திடீரென ஒரு சிறிது குறைந்ததால் மக்கள் சந்தோசப்படவில்லை. சந்தேகிக்கத் தொடங்கினர்.
எல்லாமே ‘‘தில்லுமுல்லு – தில்லுமுல்லு… உள்ளமெல்லாம் கல்லு முல்லு… ஆயிரம் நாடகம், ஆயிரம் வேஷங்கள்…’’ என்பதைத் தெளிவாக உணர்ந்தார்கள்!
இந்த திடீர் விலைக் குறைப்பு, நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டி நடத்திட எண்ணி, அதற்கான திட்டமிட்ட வேலையா? – என்று பொதுவான பேச்சு எழுந்தது!
இந்தச் சூழலில் மும்பையில் சக்திமிகு எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து நடத்திய கூட்டம்; பா.ஜ.க.வை கதிகலங்க வைத்துள்ளது! இந்த நிலையில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலைச் சந்தித்தால் தோல்விதான் முடிவு என்பது உறுதியான நிலையில், வந்த அறிவிப்பே; ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ – என்பது! இதனைச் செயல்படுத்த முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் குழு! இடையிலே நாடாளுமன்ற கூட்ட திடீர் அறிவிப்பு!
இந்தச் செய்திகள் எல்லாம் ஆளும் பி.ஜே.பி. அரசு தோல்வி பயத்தில் அரண்டுபோய் கிடப்பதை தெளிவாகக் காட்டுகிறது!
2024 நாடாளுமன்றத் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படுமா? முன்கூட்டியே வருமா? அல்லது ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல்’’ குறித்து குழு முடிவெடுக்கும் வரை காலதாமதப்படுத்திடும் நோக்கோடு, குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற போர்வையில், அடுத்த தேர்தல் அறிவிப்பு வரும் வரை ‘காபந்து’ சர்க்காராக இந்த ஆட்சியைத் தொடர்ந்திட சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுமா? இப்படிப் பல சந்தேகங்கள் எழுப்புகின்றன, திடீர் நாடாளுமன்றக் கூட்ட அறிவிப்பு பின்னணி!
தேர்தல் உரிய நேரத்தில் நடந்தாலும், முன்னே நடந்தாலும், பின்னே நடந்தாலும், பா.ஜ.க.வின் இறுதி ஆட்சி, அதாவது அதிகார ஆட்டம் முடிவை நெருங்கிவிட்டது. கழகத் தலைவர் தளபதி கூறியபடி,
‘‘கவுண்ட் டவுன் ஆரம்பமாகிவிட்டது.’’
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு