Politics

சாதிய பாகுபாடுக்கு எதிராக சட்டமியற்றிய கலிபோர்னியா.. கருப்பு நாள் என அமெரிக்கா இந்துகள் கூட்டணி கண்டனம் !

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக சாதிய பாகுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாகி சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் பட்டியலின,பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். பொது இடத்தில நடக்க, நீர் அருந்த, படிக்க, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யகூட சாதியின் பேரில் இங்கு தடை இருந்தது.

இப்படி சாதிய மனநிலை கொண்ட மக்கள் வெளிநாடு சென்றால் கூட தங்களோடு தங்கள் சாதி என்னும் மலத்தை எடுத்துச்சென்று வெளிநாடுகளிலும் சாதிய மனப்பான்மையை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் இந்தியர்கள் பெருமளவில் குடியேறியுள்ள நிலையில், அங்கு இந்தியர்களின் சாதிய மனப்பான்மை குறித்த குற்றச்சாட்டு அடிக்கடி வெளிவருகிறது.

இது போன்ற குற்றசாட்டுகள் தொடர்ந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தலைநகரமான நியூயார்க் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகர சபையில் இந்திய-அமெரிக்கரும், சியாட்டில் நகர சபையின் உறுப்பினருமான க்ஷாமா சாவந்த் என்பவர், சாதி,இனம், நிறம், பாலினம், மதம் மற்றும் தேசியம் , அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்யும் வகையில் அவசர சட்டத்தை அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்த அந்த சட்டம் நிறைவேற்றியது. இதன் மூலம் சாதி பாகுபாட்டுக்கு எதிராக சட்டம் இயற்றிய முதல் அமெரிக்க நகரம் என்ற பெருமை சியாட்டிலுக்கு கிடைத்தது.

aisha wahab

அதனைத் தொடர்ந்து, இதே போன்ற சட்டம் அமெரிக்காவின் முக்கிய மாகாணமும், அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமுமான கலிஃபோர்னியாவிலும் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க காங்கிரஸில், செனட்டராக இருக்கும் ஆயிஷா வஹாப் என்பவரால் இந்த மசோதா கலிஃபோர்னியா மாகாண சபையில் அறிமுகம் செய்யபட்டது.

இந்த சட்டம் தொடர்பான விவாதம் நடந்துவந்த நிலையில், பல கட்ட நடவடிக்கைக்கு பிறகு, தற்போது அந்த சட்டம் கலிபோர்னியா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு குடியரசுக்கட்சியினர் மற்றும் ஜனநாயக கட்சியினர் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். இதன்மூலம் பெரும்பான்மை பெற்று இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாகாண ஆளுநருக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது.

இதன்மூலம் முதல் முறையாக சாதிக்கு எதிராக சட்டம் இயற்றிய மாகாணம் என்ற பெருமையை கலிபோர்னியா பெற்றுள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு வட அமெரிக்கா இந்துகள் கூட்டணி (CoHNA) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், கலிபோர்னியா வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Also Read: ஒன்றிய அரசின் ஊழல் நாடறிந்தது.. பா.ஜ.க.வின் முகத்திரையை கிழித்தெறிந்த சி.ஏ.ஜி. அறிக்கை - முரசொலி !