Politics

1989-ல் சட்டமன்றத்தில் ஜெயலலிதா நடத்திய சேலை கிழிப்பு நாடகம்.. -திருநாவுக்கரசர் MP கூறியது என்ன ?

நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது கனிமொழி கருணாநிதி மகாபாரத திரவுபதி குறித்து பேசி யிருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவமரியாதை செய்யப்பட்டிருப்பதாக உண்மை நிலையை திரித்துக் கூறியிருந்தார்.

இந்நிலையில் உண்மைச் சம்பவம் குறித்து அன்று சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வு வருமாறு : –

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை கலைத்துவிட்டு, ஒன்றிணைந்த அ.தி.மு.க., இ.காங்கிரஸ் துணையோடு தேர்தலில் நின்றால் வெற்றி பெறலாம் என்ற ஆலோசனைகள் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. டெல்லியோடு ஆலோசனை நடத்தினார் ஜெயலலிதா. இப்போதுதான் தி.மு.க. ஆட்சி அமைந்துள்ளது. உடனடியாக கலைப்பது எல்லா மட்டத்திலும் அவப்பெயர் உருவாக்கும், ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவானால் ஆட்சியை கலைக்க இயலும் என டெல்லி வட்டாரம் தெரிவித்து விட்டது!

அப்போது, ஜெயலலிதாவுக்கும், அவரது ஆலோசகர்களுக்கும் மனதில் உதயமானது, சட்டமன்றத்தில் ஜெ.அணி, ஜானகி அணி இடையே நடந்த மோதலை காரணம் காட்டி சட்டமன்றத்தை கலைத்து ஆளுநர் ஆட்சி பிரகடனப்படுத்திய விவகாரம்தான்! அதே போன்று சட்டமன்றத்தில் குழப்பம் விளைவிக்க என்ன செய்யலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது என்ற சேதி அன்றைய முதல்வர் கலைஞருக்கு எட்டியது!

1989 மார்ச் 25ந் தேதி, பட்ஜெட் உரையை முதல்வர் கலைஞர் நிகழ்த்தும் போது தாங்கள் போட்ட திட்டத்தை நிறைவேற்றிட முடிவெடுத்திருந்தனர். இதனை அறிந்த முதல்வர் கலைஞர், முதல் நாள் இரவே கழக சட்டமன்ற உறுப்பினர்களை, மறுநாள் அவையில் ஜெயலலிதா கட்சியினர் எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அமைதி காத்திட வேண்டும். யாரும் எந்தவித எதிர்வினையும் ஆற்றிடக் கூடாது என அமைச்சர்கள் மூலம் எச்சரித்திருந்தார்!

“மார்ச் 25, 1989 - அன்று காலை 9 மணிக்கே கிட்டதட்ட 500 அ.தி.மு.க. தொ(கு)ண்டர்கள் கோட்டை வளாகத்தில் திட்டு திட்டாய் காணப்பட்டனர். தி.மு.க. வினர் 200 பேர் 11 மாடிக் கட்டிடத்தின் கீழே இருந்தனர். வெ.கிருஷ்ணமூர்த்தி, - மதுசூதனன் தலைமையில் நான்கு வேன்களிலும், இரண்டு கார்களிலும், நான்கு ஆட்டோக்களிலும் மேலும் பல தொ(கு)ண்டர்கள் சரியாக 10 மணிக்கு கோட்டை வளாகத்தில் வந்திறங்கினர்”

- என மார்ச் 25 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடந்தது குறித்து எழுதிய ‘தராசு’, 7.4.89 தேதியிட்ட இதழ் குறிப்பிட்டிருந்தது இங்கு கவனிக் கத்தக்கது.

மொத்தத்தில், டெல்லியில் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, ஆதரவாளர்களுடன் கூடி சட்டமன்றத்தில் குழப்பம் உருவாக்க முடிவெடுத்ததாக வந்த தகவல் சரியானதுதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அ.தி.மு.க.வின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்தது!

அவை கூடியதும் இ.காங்கிரஸ் துணைத் தலைவர் குமரி அனந்தனும் ஜெயலலிதாவும் எழுந்து தாங்கள் தந்த உரிமை மீறல் பிரச்சினைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டனர். “முதல்வரும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்பதற்கு ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வருகிறேன்’’” என்று ஜெயலலிதா கூறினார். அப்போது முன்னாள் சபாநாயகராக இருந்த பாண்டியன் எழுந்து - அவை விதிகளைப் பற்றி கூறி - ஜெயலலிதாவின் நடவடிக்கை தவறானது எனக் கூற, சிறிது நேரம் அவையில் பரபரப்பு நிலவியது. தி.மு.கழக உறுப்பினர்கள் எல்லோரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். சபாநாயகர், பாண்டியனை உட்காருமாறு கூறி விட்டு, குமரி அனந்தனும், ஜெயலலிதாவும் கொடுத்துள்ள உரிமைப் பிரச்சினை குறித்து திங்கட்கிழமை தீர்ப்பு அளிப்பதாக கூறிவிட்டு, முதல்வரை பட்ஜெட் உரையை படிக்குமாறு கூறினார்.

உடனே முதல்வர் கலைஞர் எழுந்து ‘பட்ஜெட்’ உரையை படிக்கத் துவங்கினார்.

ஜெயலலிதா எழுந்து ‘கிரிமினல் முதல்வர் பட்ஜெட் படிக்கக் கூடாது, என்றும் You Criminal, don’t Read என ஆங்கிலத்தில் சத்தமிட்டார். உடனே அருகிலிருந்த அ.தி.மு.க.வினர் பட்ஜெட் உரையை கலைஞர் கையிலிருந்து பிடுங்கினர். ஜெயலலிதா, கலைஞர் முகத்தினை நோக்கி கையை உயர்த்திட கலைஞர் கண்ணாடி கீழே விழுந்தது. அ.தி.மு.க. உறுப்பினர்கள் கலைஞரை தாக்கும் நோக்கில் முன்னால் ஓடி வர, கழக அமைச்சர்கள் அவர்களை பிடித்துத் தள்ளி கலைஞரை பாதுகாத்தனர்.

அதைத்தவிர ஜெயலலிதா எதிர்பார்த்து வந்தபடி எந்தவித எதிர்வினையும் ஆற்றாது தி.மு.க. உறுப்பினர்கள் கலைஞர் ஆணையை ஏற்று அமைதியாக இருந்து விட்டதால் - ஜெயலலிதா போட்டு வந்த திட்டம் எதுவும் நிறைவேற வில்லை. உடனே அவரே தலையை கலைத்துக் கொண்டு, சேலையில் ஒரு பகுதியை கிழித்து விட்டுக் கொண்டு தன்னை தி.மு.க.வினர் தாக்கி விட்டது போல கூச்சலிட்டுக் கொண்டு வெளியேறினார்.

இந்தச் சம்பவம் எப்படி திட்டமிடப்பட்டது என்று பின்னர் அ.தி.மு.க.விலிருந்து விலகிய திருநாவுக்கரசே சட்டமன்றத்தில் விளக்கினார்!

அ.தி.மு.க.விலே ஜெயலலிதாவிற்கு ஆதரவாக இருந்த திருநாவுக்கரசு அவர்கள் அந்தச் சம்பவம் நடைபெற்ற ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு அதே சட்டப் பேரவையில் விளக்கமளித்தார். நீண்ட விளக்கம்தான். ஆனால் பதிவு செய்யவேண்டிய விளக்கம். அதனால் அந்த விளக்கம் முழுவதையும் படியுங்கள். அன்று எப்படிப்பட்ட அரசியல் நாடகங்கள் தி.மு.க.விற்கு எதிராக நடத்தப்பட்டன என்பது விளங்கும்.

அன்று நடைபெற்ற சம்பவத்தின் உண்மை நிலையை விளக்கி சட்டமன்றத்தில் திருநாவுக்கரசர் பேசினார். அவரது பேச்சின் ஒரு பகுதி வருமாறு: –

“இதே சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் பட்ஜெட்டைப் படித்தபோது சட்டமன்றத்திலே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. அனைவருக்கும் தெரியும். இப்போது நான் சொல்வது; என்னுடைய தாய் மீது ஆணையாக நான் தெய்வமாக வணங்குகிற எம்.ஜி.ஆர். அவர்கள் மீது சத்தியமாக சொல்வதாகும்.

முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவரது வீட்டில் உட்கார வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து “நான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் பட்ஜெட் படிக்கும்போது நான் பிடித்து இழுத்தால் நன்றாக இருக்காது. எனவே என் பக்கத்திலே இருக்கிற நீங்கள் முதலமைச்சர் கருணாநிதியின் கையிலே இருக்கிற பட்ஜெட் காப்பியை பிடித்திழுத்து அடிக்க வேண்டும்” என்று சொன்னார். நான் உடனே மிகுந்த வேதனையோடு சொன்னேன். “தெரிந்தோ தெரியாமலோ புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களைப் பத்தாண்டு காலம் கௌரவமிக்க பதவிகளில் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். தயவு செய்து அடியாட்களாக எங்களை மாற்றாதீர்கள். அதற்கு என்னுடைய மனச்சாட்சி இடம் தரவில்லை.

இரண்டாவது, இதுபோன்ற சம்பவம் வேண்டாம்” என்று நான் வாதாடியதுடன்; “முதல் அமைச்சர் நமக்குப் பிடிக்காதவராகக்கூட இருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால் அவருக்குப் பின்னாலே அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர் மீது கை வைக்கிறபோது அவர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். அங்கு நிச்சயமாக அடிதடி நடக்கும். ரகளை நடக்கும்.

புரட்சித் தலைவர் இருக்கும் போது எவ்வளவோ பிரச்சினைகள் நடந்திருக்கின்றன. அவருக்குப் பக்கத்தில் யாராவது போனால் கூட நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். தாக்கியிருப்போம். அதுபோல இன்றைய முதலமைச்சருக்குப் பின்னாலே அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாகத் தாக்குவார்கள். அசம்பாவிதம் நடக்கும். அசிங்கமாகப் போய்விடும். பத்திரிகைகளிலே எல்லாம் கேவலமாக எழுதுவார்கள்” என்று வாதாடினேன்.

“மூத்தத் தலைவர்களை எல்லாம் கேட்டீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “அவர்களைக் கேட்டால் அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற காரணத்தினாலே அவர்களை எல்லாம் டைனிங் ஹாலிலே உட்கார வைத்திருக்கிறேன்”’’ என்று சொன்னார். “நான் முடியாது” என்று சொன்ன உடனே சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து “சரி, அவர் மாட்டேன் என்று சொல்லுகிறார். உங்களில் யாருக்கு வசதிப்படுகிறதோ அவர்கள் போய் பட்ஜெட் படிப்பதைப் பிடுங்கிக் கிழியுங்கள்’’ என்று சொல்லிவிட்டு மேலே போய்விட்டார்.

டைனிங் ஹாலுக்கு உள்ளே டாக்டர் ஹண்டே, திரு.ராகவானந்தம், திரு.மாதவன், திரு. எஸ்.டி.எஸ். மற்றும் அப்போதிருந்த மூத்தத் தலைவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நான் அங்கே போய், “யார் இந்த ஆலோசனையைச் சொன்னது’’ என்று அவர்களிடத்திலே சண்டை போட்டேன்.

செல்வி ஜெயலலிதா மாடியிலிருந்து இறங்கி வந்தார். வந்தவுடனே, அங்கே இருந்தவர்களைப் பார்த்து, “புறப்படலாம், நேரம் ஆச்சு” என்றார். மூத்தத் தலைவர்கள் யாருக்கும் அவர் வந்த வேகத்திலே தடுத்துச் சொல்ல துணிச்சல் இல்லை. அவரை அழைத்துச் சென்று சட்டமன்ற அவையிலே உட்கார வைத்து விட்டு, “தோழமைக் கட்சி, காங்கிரஸ் கட்சியிடத்திலே இதுபற்றி கேட்டீர்களா?” என்றேன். அவர், “எல்லோரையும் கலந்துதான் சொல்லுகிறேன். இன்றைக்குச் சட்டமன்றத்திலே வன்முறை நடந்தால் இன்றைக்கு மாலையே ஆட்சி கலைக்கப்படும் என்று எனக்குத் தகவல் வந்திருக்கிறது” என்று சொன்னார்.

நான் உடனே தோழமைக்கட்சியான காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் அறைக்குச் சென்று “இன்றைக்கு நாங்கள் எல்லாம் வெளிநடப்பு செய்வதாக இருக்கிறோம். நீங்களும் எங்களோடு ஒத்துழைப்புத் தர வேண்டும்” என்றும், அத்துடன், “இன்றைக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்களும் உள்ளேயிருந்து ஏதாவது உதவி செய்வீர்களா?” என்றும் மறைமுகமாகக் கேட்டேன்.

நேரிடையாகச் சொல்லாமல் அவர் “நான் புறப்படுவதற்கு முன்னாலேயே பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் 8.30 மணிக்கு பேசி விட்டுத்தான் வந்தேன். அதற்கு காவல் துறையின் மீது ஒரு கண்டன அறிக்கையைப் படித்துவிட்டு எங்களுடைய காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்யப் போகிறது. இதுதான் எங்களுக்கு டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிற உத்தரவு” என்று சொன்னார்.

செல்வி ஜெயலலிதா அவையில் உட்கார்ந்திருந்தார். நான் வேகமாக வந்து, “திரு. மூப்பானர் அவர்களிடத்திலே கேட்டேன். அவர்கள் எந்த விதமான அசம்பாவிதமும் இங்கே நிகழ்த்துவதற்குத் தயாராக இல்லை. காங்கிரஸ்காரர்கள் வெளிநடப்பு செய்யப் போகிறார்கள்” என்று சொன்னேன். “மூப்பனார் எப்போதும் இப்படித்தான் எனக்கு விரோதமாகத்தான் அவர் சொல்லுவார். எனக்கு வேறு மாதிரித் தகவல் வந்திருக்கிறது” என்று கூறியதுடன் “நீங்கள் போய் ஏன் அவரிடத்தில் கன்சல்ட் செய்தீர்கள்?” என்றார்.

அதன்பிறகு அன்றைக்கு இங்கு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அனைவருக்கும் தெரியும். வன்முறை யைத் தொடர்ந்து சட்டமன்றத்திற்குள்ளே அடிதடி ரகளை எல்லாம் நடந்தது. பிறகு செல்வி ஜெயலலிதா அவர்களை அழைத்துக் கொண்டு வண்டியிலே நானும் திரு.கே.கே.எஸ்.எஸ். ஆரும் முன்னாலேயும் பின்னாலேயும் அமர்ந்து கொண்டு போகிறோம். வீடு போகிறவரை, “இன்றைக்கு மாலையே ஆட்சியை கலைக்கப் போகிறார்கள். ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள்” என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

இவ்வாறு சு.திருநாவுக்கரசர் எம்.பி. கூறியுள்ளார்.

Also Read: நாங்குநேரி கொடூரம்.. கைது செய்யப்பட்ட மாணவரின் தந்தை பாஜக உறுப்பினர்.. உறுதி செய்த திமுக மாவட்ட செயலாளர்!