Politics

”மத வெறுப்பு அரசியலை நாடெங்கும் பரப்பிய கொடுங்கோலர்களைத் தூக்கி எறியுங்கள்” : சிலந்தி!

“கபட நாடகமாடும் இந்த கயவர்களைத் தூக்கி எறியுங்கள்”

(Throw the hypocritical Rascals out)

–ஒரு காலத்தில் அமெரிக்கத் தேர்தல் களத்தையே அதிரவைத்த வாசகங்கள் இவை!

கடுமை கலந்த இந்த வாசகங்களைப் பயன்படுத்த வேண்டிய அளவு அந்த நாட்டின் நிர்வாகம் சீர்குலைந்து நின்றநிலை! 1990 – 91 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்கப் பொருளாதாரம் சுருண்டு கிடந்தது. நிர்வாக சீர்கேட்டால் அரசியல் அமைப்புகள் தோல்வி கண்டு கிடந்தன. அந்தக் கால கட்டத்தில்தான் இந்தக் காட்டமான சொற்கோர்வையை ஜாக்கார்கன் என்பவர் உருவாக்கினார்.

இந்த வாக்கியம் அமொிக்கா முழுவதும் அன்று பேசும் பொருளானது. அதனை வடிவமைத்த ஜாக்கார்கனுக்கு அமெரிக்காவின் பிரபல ஏடான ‘டைம் (TIME) இதழ், ‘ இந்த வாரக் கதாநாயகனாக’ (Hero of the week) மகுடம் சூட்டியது. அந்த அளவுக்கு அந்த வார்த்தைகள் மக்கள் மனதில் பதிந்து விட்டன.

இந்தியாவில் ஒன்றியத்தையும், சில மாநிலங்களையும் ஆண்டு கொண்டு இருக்கும் பாரதிய ஜனதா அரசுகள் நடத்திவரும் அவல, மதவெறிக் கூத்துகளால் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள மதச்சார்பின்மை (Secularism) இன்று மரண ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது.

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபின் ராஷ்டிரிய சுயம் சேவக், பஜ்ரங்தள், விசுவ ஹிந்து பரிட்சத் போன்ற சங்பரிவார் கும்பல் அடித்திடும் கொட்டம் எல்லை மீறிக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் எங்கு கலவரம் வெடிக்குமோ என்று இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவரும் செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் அளவு மத வெறுப்பு அரசியல் நாடெங்கும் அரசோச்சத் தொடங்கியுள்ளது.

மதவெறித் தனத்தின் உச்சகட்டம் எங்கே போய் இருக்கிறது என்றால் இந்த நாட்டின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் உத்தமர் காந்தியை தேசத் துரோகி என்றும், அவரை சுட்டு வீழ்த்திய வீணன் கோட்சேவை கொண்டாடும் அளவு துணிவும் தைரியமும் சில மதவெறியர்களுக்கு வந்துள்ளது.

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உருவாக்கிய ‘ஹிந்து யுவ வாஹினி’ என்ற ஒரு அமைப்பு டெல்லியில் கூடி, தங்களது கரங்களை உயர்த்தி உறுதிமொழி ஏற்றுக் கொள்கின்றனர்.

“நாங்கள் இந்தியாவை இந்து தேசமாக்குவோம். இந்துவுக்கு மட்டுமான தேசமாக்குவோம். அதற்காகப் போராடுவோம்; தேவைப்பட்டால் உயிர்த்தியாகம் செய்திடவும் தயங்கோம், அதே நேரத்தில் கொலையும் செய்வோம்!

–இது அவர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியின் வாசகங்கள்!

இந்த உறுதிமொழியை சுரேஷ் சங்ஹாங்கே எனும் ஒரு பத்திரிகையாளர் கூற அதனை எதிரொலித்து அந்த இளைஞர்கள் ஏற்கின்றனர். இந்தப் பத்திரிகையாளர் ‘சுதர்சன் நியூஸ்’ எனும் ஒரு வலதுசாரி ஊடகத்தின் தலைமை ஆசிரியர்!

சாதுவி அன்ன பூரணா எனும் ஒரு பெண் சாமியார் , ஹிந்து மகாசபாவின் பொதுச் செயலாளரான அவர் முஸ்லிம்களைக் கொன்று குவிக்க வெளிப்படையாக அழைப்பு விடுக்கிறார்.“நம்மில் 100 பேர் அவர்களின் 2 மில்லியன் பேரை அதாவது 20 லட்சம் பேரை கொல்லத் தயாரானால் இந்தியாவை இந்து தேசமாக்குவதில் நாம் வெற்றி கண்டிடுவோம்”என்று பேசிவிட்டு, நாங்கள் போலிசுக்குப் பயப்பட மாட்டோம் என்று பேட்டி தருகிறார்!

சுவாமி ஆனந்த சுவருப் என்பவர் ஹரித்வாரில் கிருஸ்துமசை கொண்டாடக் கூடாது என்றும், அங்கே முஸ்லீம் வியாபாரிகளைத் தடை செய்ய வேண்டும் என்றும் மதம் சார்ந்த அமைப்பான ‘தரம் சன்சாட்’ கூறுவதை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் ஏனென்றால் அதுவே கடவுளின் வாக்கு’ என்றும் ஏற்காவிடில் 1857ல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடந்த போரைப் போன்ற ஒன்றினை நாடு சந்திக்கும்– என பகிரங்கமாக மிரட்டுகிறார்.

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபின் இதுபோன்று, இந்து அமைப்புகளின் போர்வையில் பல மிரட்டல்கள், மதவெறி பேச்சுக்கள், எத்தனையோ நடந்து வருகின்றன. இது ஒரு மிகப் பெரிய இந்து பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயல்களாகவே நடுநிலையாளர்களால் நோக்கப்படுகிறது.

உத்தமர்காந்தி, சில மதவெறியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட தினத்தை தியாகிகள் தினமாக ஒரு கூட்டம் கொண்டாடுகிறது. ஹிந்து மகாசபாவின் தேசியச் செயலாளரான பூஜா ஷகுன் பாண்டே, காந்தியின் உருவ பொம்மையைத் துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியில் திளைக்கிறார். அந்தக் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்து எல்லாரோடும் பகிர்ந்து சந்தோஷம் கொண்டாடுகிறார்! அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் பல இடங்களில் மகாத்மாவை கொன்ற கோட்சே படத்துக்கு மாலையணிவித்து, தாரைத் தப்பட்டை முழங்க கொண்டாடி களிக்கின்றனர்!

பி.ஜே.பி. ஆளும் உத்திரப் பிரதேச மாநில அரசு இதன் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை, அவர்கள் மீது கண்துடைப்பாக வழக்குப் பதிவு செய்துள்ளதாக அறிவித்ததோடு சரி!

2021 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் ஹரித்வாரில் நடந்த, அந்த ‘தரம் சன்சாட்’ (மதக் கூட்டம்) நிகழ்ச்சியில் முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு பகிரங்கமாக அறைகூவல் விடப்பட்ட அந்தக் கூட்டத்தில் பி.ஜே.பி.யின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டதாக செய்திகள் வந்தன. பிரதமர் மோடியோ அல்லது பி.ஜே.பி.யின் முக்கியத் தலைவர்கள் யாரும் இத்தகைய மதவெறியைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

இங்கே நாம் சுட்டிக்காட்டியிருக்கும் நிகழ்ச்சிகள் மிகக் குறைவானவையே! இவை எல்லாம் பகிரங்கமாக இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள்! மதத்தை முன்னிறுத்தி சில இளைஞர்களைமூளைச் சலவை செய்து மதவெறியை அவர்களுக்கு ஏற்றி இந்தியாவையே வன்முறைக் களங்களாக மாற்றி, பற்றி எரியும் நெருப்பிலே குளிர்காய நினைக்கிறது ஒரு கூட்டம்!

இவர்களின் மதவெறியாட்டத்தில் பிற மதத்தினர் மட்டுமின்றி அப்பாவி இந்துக்களும் பலியாகின்றனர்! பல நேரங்களில் இந்துக்களை பலி கொடுத்தும் மதவெறி தூண்டப்படுகிறது. மோடியும் அமித்ஷாவும் குஜராத் மாநிலத்தில் அரசோச்சிய காலத்தில் கோத்ரா பகுதியில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்து யாத்ரிகர்கள் கொல்லப்பட்டனர். இதன் தொடர்பாக பெரும் மதக்கலவரம் வெடித்தது! ரயில் பெட்டி எரிந்தது தொடர்பாக ஒன்றிய அரசு நியமித்த விசாரணை ஆணையம் ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிர் இழந்ததாகவும், தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதும் இங்கு நினைவு கூறத்தக்கது.

ஆனால் அந்த மாநிலத்தில் அன்று பரப்பப்பட்ட தவறான தகவல் காரணமாக எண்ணிப் பார்த்தாலே சப்தநாடியையும் ஒடுங்க வைக்கும் பயங்கர வெறித்தாண்டவம் அரங்கேற்றப்பட்டது. ஒரு நாள், இருநாள் அல்ல; ஏறத்தாழ பதினைந்து நாட்களுக்கு மேல் கொலை, கொள்ளை, தீக்கிரையாக்கல், கற்பழிப்பு, சூறையாடல் என அத்தனை பாதகச் செயல்களையும் குஜராத் மாநிலம் கண்டது!

அரசு தகவலின்படியே 790 இஸ்லாமியர்கள் மட்டுமல்ல; 254 இந்துக்களும் அந்தக் கலவரங்களில் கொல்லப்பட்டுள்ளனர்!

இந்தத் தாக்குதல்கள் மிகப் பெரிய அளவில் பரவியதற்கு அன்றைய குஜராத் அரசின் பக்கபலமும் காரணம் என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது!

அன்றைய பிரதமர் வாஜ்பாய், கலவரப் பாதிப்பு பகுதிகளுக்குச் சென்று ஆறுதல் கூறச்சென்றபோது, பிரதமருடன் சென்ற அன்றைய குஜராத் முதலமைச்சர் மோடி அந்தப் பகுதி மக்களின் கடும் எதிர்ப்புக் கோஷங்களைக் கேட்க நேர்ந்தது! பிரதமர் வாஜ்பாய் அவர்களும் “ஆட்சியில் இருப்பவர்கள் ராஜதர்மத்தை மனதில் கொள்ள வேண்டும்” என்று வேதனையோடு குறிப்பிட்டார்!

வாஜ்பாய் குறிப்பிட்ட அந்த ராஜ தர்மத்தை இன்று பி.ஜே.பி. ஆளும் மணிப்பூர், ஹரியானா மாநிலங்களில் உள்ள பி.ஜே.பி. முதலமைச்சர்கள் மனதில் கொண்டுள்ளனரா? ஒன்றியத்தை ஆளுவோர் அது குறித்து கவலைப்படுகின்றனரா? – என்பதே கேள்விக் குறியாகிவிட்டது!

மணிப்பூரில் கலவரம் வெடித்து மூன்று மாதங்கள் கடந்தபின் இப்போதைய நிலை படுமோசமாகி வருகிறது! பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளிலிருந்து இந்த நாள் வரை 4000க்கு மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் லட்சக்கணக்கில் தோட்டாக்கள் போராட்டக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த மூன்று மாதமாக நடைபெறும் வன்முறைகளில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாகக் கூறப்பட்டாலும் சாவு எண்ணிக்கை இன்னும் பெருமளவில் இருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது!

பா.ஜ.க. ஆளும் ஹரியானாவும் இப்போது மதக் கலவரத்தால் மிரண்டு அஞ்சிக் கிடக்கிறது!

அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதச்சார்பு வெறியாட்டங்களை (அரசு நினைத்திருந்தால்) தடுத்திருக்க முடியும்! விஸ்வஹிந்து பரிஷத் எனும் சங்பரிவார் அமைப்பு நடத்திய ஊர்வலத்தில், பசு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த மோனுமனேசார் எனும் இந்து வெறியன் ஒருவன் (இரண்டு முஸ்லிம்களை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியவன்) தானும் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்து நடந்த ஊர்வலம் அது! அவன் கலந்து கொள்வதாக ஊர்வலம் நடத்த இருக்கும் தேதிக்கு இரு தினங்கள் முன்பே அறிவித்து சமூக ஊடகங்களில் அந்தச் செய்தி பரவுகிறது. ஹரியானாவை ஆளும் பி.ஜே.பி. அரசு இதுகுறித்து கவலைப்படவே இல்லை!

முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதிகள் வழியாக அந்த இந்து அமைப்பின் ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. வன்முறை வெடிக்கிறது; இரு தரப்பாரும் வன்முறைக்குக் காரணத்தை ஒருவர் மீது ஒருவர் சுமத்திக் கொள்கின்றனர். ஆனால், ஹரியானாவை ஆளும் பா.ஜ.க. அரசு அந்த ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி தந்தது? தேடப்படும் குற்றவாளி ஒருவன் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்து சமூக ஊடகங்களில் இரு தினங்களாக செய்தி பரப்பிய பின்னரும் ஹரியானா அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதுபோன்ற கேள்விகளை “டைம்ஸ் ஆப் இந்தியா” போன்ற ஏடுகளே எழுப்புகின்றன!

இவை எல்லாம் எதனைத் தெளிவாகக் காட்டுகின்றன என்பதை நாடு உணர வேண்டும். எத்தனை ஆயிரம் இந்திய மக்கள் தங்கள் இன்னுயிரைப் பலிகொடுத்தாலும் எங்களுக்குக் கவலையில்லை; அவர்களின் உடமைகள், குடியிருப்புகள் தீக்கிரையானாலும் பரவாயில்லை; எங்கும் மரண ஓலங்கள். கற்பழிப்புக் கதறல்கள், சிசுவதைகள், இந்த நாட்டுப் பெண்களை நிர்வாணமாக்கி மானபங்கப் படுத்துதல் போன்ற சம்பவங்கள்தொடர்கதையானாலும் எங்களுக்கு எந்தவித மனக்கிலேசமும் கிடையாது!

இந்தியாவை இந்து நாடாக அதாவது இந்துக்களுக்கு மட்டுமான நாடாகவே மாற்றுவோம்!

இது வேத பூமி, சனாதான தர்மமே இங்கு நிலை நிறுத்தப்பட வேண்டும். வர்ணாசிரமக் கொள்கை ஒன்றையே இந்த நாடு கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறித் திரிகிறது ஒரு கூட்டம்!

இந்தக் கூட்டமும் அதன் ஆதரவாளர்களும் மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்து விட்டால் இன்றைய இந்திய அரசியல் சட்டம் இருக்காது.

கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் குறிப்பிட்டபடி தமிழ்நாடே இருக்காது! அதுமட்டுமல்ல; இந்த குள்ளநரிக் கூட்டத்தின் ஆட்சியில், இந்தியாவின் ஜனநாயகம் கேள்விக் குறியாகி நிற்கிறது.

பொருளாதாரம் சிதைந்து பண மதிப்பு இழந்து எல்லா மட்டங்களிலும் விலைவாசிகள் ஏறிக் கொண்டிருக்கின்றன!

ஏழை எளிய மக்கள் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் தள்ளிட விழி பிதுங்கிக் கிடக்கின்றனர்!

“சீனி சக்கரை சித்தப்பா; ஏட்டில் எழுதி நக்கப்பா” எனும் விதத்தில் நாட்டில் நொந்து நூலாகி கிடக்கும் மக்கள் முன், நாளும் விதவிதமாக உடை உடுத்தி, பலவித தொப்பிகள் அணிந்து நமது நாட்டின் பிரதமர் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

“அச்சே தின் ஆனே வாலே ஹை….”என முழங்கி, ஆட்­சியை பிடித்து, ஒன்பது ஆண்டுகள் கடந்து 10 ஆவது ஆண்டிலும் அதே பழைய பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கிறார். இந்திய மக்கள், நடந்து கொண்டிருக்கும் பி.ஜே.பி. கூட்டணி ஆட்சியில் பல முனைகளிலும் பட்டிடும் அவதிகளைக் காணும்போது, அமெரிக்காவில் ஒருகாலத்தில் ஒலித்த தொடரே நினைவிலாடுகிறது!

நாகரிகம் கருதி, அந்த சொற்றொடரை சிறிது மாற்றி அமைத்து Throw The Tyrants Out .

‘இந்தக் கொடுங்கோலர்களைத் தூக்கி எறியுங்கள்’ – என்ற நிலையில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை அணுகுவோம்!

- சிலந்தி

Also Read: நீங்கள் சொன்ன மூன்று வாக்குறுதிகளை நிறைவேற்ற யார் தடுத்தது?.. பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிய முரசொலி!