Politics

நாளை மறுநாள் நாடாளுமன்றம் செல்வாரா ராகுல் காந்தி?... காங்கிரஸ் கட்சியின் திட்டம் என்ன?: முழு விவரம் இதோ!

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது "மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லோரும் திருடர்களாக இருக்கிறார்கள்" என கூறியிருந்தார்.

இதையடுத்து மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்ததாகக் கூறி பா.ஜ.க நிர்வாகி புர்னேஷ் மோடி வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து உடனே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கவும் மறுத்து விட்டது.

இதையடுத்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதில் நான் குற்ற எதுவும் செய்யதாக உணரவில்லை என்பதால், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. அது ஒருவேளை குற்றமாக இருக்குமானால் முன்பே மன்னிப்பு கேட்டிருப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பா.ஜ.கவினர் மோடி பெயரை அவமதித்தால் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தண்டனையால் சம்மந்தப்பட்ட எம்.பி மட்டுமல்ல, ஒரு தொகுதி மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவருக்கு ஓராண்டு 11 மாதங்கள் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க மாட்டார். அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை ஏன் வழங்கப்பட்டது என்பது குறித்த காரணம் எதுவும் சூரத் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என நீதிபதிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

பின்னர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டு சிறை தண்டடைக்கு நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் எம்.பியாக ராகுல் காந்தி தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவை செயலகம் தகுதி நீக்கத்தை ரத்துசெய்து உத்தரவிட்டால் நாளை மறுநாள் முதல் ராகுல் காந்தி நாடாளுமன்றம் செல்ல முடியும். மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த வாரத்தோடு முடிவடைவதாலும் இந்தியா கூட்டணி கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லாத்தீர்மானம் மீது 8 ஆம் தேதி விவாதம் தொடங்குவதாலும், ராகுல் காந்தியின் உத்தரவை திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் காங்கிரஸ் கட்சி முனைப்புகாட்டி வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனே நேற்று சபாநாயகர் ஓம்பிர்லாவை மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிரஞ்சன் சௌத்தரி சந்தித்து தீர்ப்பு குறித்த விபரங்களைத் தெரிவித்துள்ளார். இன்று தீர்ப்பு நகலோடு மீண்டும் சபாநாயகரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

அதேபோல் ராகுல் காந்திக்கு 2 ஆண்ட சிறை தண்டனை தீர்ப்புவந்த உடனே அவரை தகுதிநீக்கம் செய்த அதேவேகத்தோடு உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று அவரது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்துக்கு தடை.. உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற 'இந்தியா' -தலைவர்கள் வாழ்த்து !