Politics

"காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் ஊழல் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்"-ராகுல் காந்தி அதிரடி!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர்.

தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், பாஜக அரசை "40 சதவிகித கமிஷன் அரசு: என விமர்சித்து வந்தது. அதனைத் தொடர்ந்து ஆட்சி பொறுப்பேற்றதும் தங்கள் ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், காங்கிரசை சேர்ந்த அமைச்சர்கள் உட்பட யார் ஊழல் செய்தாலும், உடனடியாகப் பதவி நீக்கம் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். பெங்களுருவில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் தலைமையில், 2024 தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய ராகுல் காந்தி, " வரும் நாடாளுமன்ற தேர்தலில் மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு கட்சிக்கு வெற்றியை தேடித் தரவேண்டும். ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. அமைச்சர்கள் உட்பட யார் ஊழல் செய்தாலும், உடனடியாகப் பதவி நீக்கம் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் அவை கைவிடப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Also Read: 10 நாட்களாக ABSENT..மணிப்பூர் விவாதத்திற்கு அஞ்சி நடுங்கும் பிரதமர் மோடி: இந்தியா கூட்டணி குற்றச்சாட்டு!