Politics
"மணிப்பூரை மீட்டெடுக்க உங்களின் தலையீடு முக்கியமானது" : குடியரசுத் தலைவரிடம் இந்தயா கூட்டணி வலியுறுத்தல்!
மணிப்பூர் மக்களின் துன்பத்தைப் போக்குவதற்கும், மாநிலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்க உதவிட வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து இந்தியா கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகச் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. சமூகவலைதளத்தில் வைரலான வீடியோ நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாநில அரசும், காவல்துறையும் இந்த விஷயத்தை உடனடியாகத் தீர்க்கத் தவறிவிட்டது.
குற்றவாளிகளைக் கைது செய்ய இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தாமதம் இப்பிரச்சனையின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிராகப் பல வன்கொடுமைகள் நடந்துள்ளதை இந்த ஒரு சம்பவமே காட்டுகிறது.
இந்தியா கூட்டணி எம்.பிக்கள் குழு ஜூலை 29,30 ஆகிய இரண்டு நாட்கள் மணிப்பூரில் ஆய்வு செய்துள்ளனர். இவர்கள் மாநிலத்தின் மோசமான நிலை குறித்து அறிக்கையாகவும் கொடுத்துள்ளனர். அம்மாநில ஆளுநரையும் சந்தித்து கொடூரங்களை விளக்கியுள்ளனர்.
இந்த வன்முறையின் தாக்கம் மணிப்பூரில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநிலத்தை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
சுராசந்த்பூர், மொய்ராங் மற்றும் இம்மால் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் குறைவாகக் கிடைப்பதால் சிரமங்களைச் சந்திக்கிறார்கள். இவர்கள் மத்தியில் ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த வன்முறையின் தீவிரத்தை விவாதிக்க வேண்டும், பிரதமர் விளக்கம் கொடுக்க வேண்டும் என இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்தில் வலியுறுத்துகிறது. ஆனால் தொடர்ந்து மக்களின் குரல்கள் நாடாளுமன்றத்தில் ஒடுக்கப்படுகிறது.
இனியும் தாமதிக்காமல் மாநிலத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட உங்களின் தலையீடு வேண்டும். பிரதமர் மணிப்பூர் குறித்து உரையாற்றுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மணிப்பூர் மக்களின் துன்பத்தைப் போக்குவதற்கும், மாநிலத்தில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும் உங்களின் ஆதரவும் தலையீடும் முக்கியமானது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!