Politics

மணிப்பூர் கலவரம்: "மாநில அரசு செயல்படுகிறதா? காவல்துறை என்ன செய்கிறது?" - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் !

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த வன்முறை நடந்து வருகிறது.

மேலும் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்களால் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து அவையை ஒத்திவைத்து வருகிறது.இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றமும் ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை விமர்சித்து காட்டமான கருத்துக்களை கூறியுள்ளது. மேலும் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மணிப்பூரில் வன்முறை நீடிக்கும் நிலையில் இரண்டு மாதமாக அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்றும், அங்கு சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துள்ளது. அரசால் மக்களை காப்பாற்ற முடியாவிட்டால் மக்கள் எங்கு செல்வார்கள்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், பல வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்ல?எத்தனை காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? மணிப்பூர் பாலியல் சம்பவம் குறித்து, சம்பந்தப்பட்ட போலீசார் யாரையாவது விசாரித்தார்களா? கைது செய்துள்ளார்களா? மணிப்பூர் டி.ஜி.பி இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்றும் தொடர் கேள்விகளை எழுப்பினர்.

அதோடு, மணிப்பூர் கலவரம் தொடர்பான 6, 500 வழக்குகளை எப்படி சி.பி.ஐ விசாரிக்கும். சி.பி.ஐ செயலிழந்துவிடாதா ? என்று கேட்ட நீதிபதிகள், டி.ஜி.பி. 4 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு ஒப்படைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், 118 உடல்கள் இன்னும் ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. எத்தனை நாட்கள் இப்படி வைத்திருக்க முடியும் உடல்களை வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினர்.

Also Read: மத்திய பல்கலை.யில் சாதிய பாகுபாடு.. 4% பேராசிரியர் மட்டுமே OBC பிரிவினர்.. 85% பேராசிரியர் OC பிரிவினர் !