Politics

மணிப்பூர் வன்முறை.. வெளியேறும் மெய்தி சமூக மக்கள்.. வடகிழக்கு மாநிலங்களில் பரவும் வன்முறையால் அச்சம் !

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போதுதான் அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மணிப்பூர் கலவர விவகாரத்தில் பாஜக முதல்வரின் செயலற்ற தன்மை குறித்து விமர்சித்த மணிப்பூர் இளைஞர் போலிஸார் முன்னிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது செய்தியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கு குக்கி சமூக மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் ஒன்றிய பாஜக அரசு அமைதி காக்கிறது.

இந்த நிலையில், மணிப்பூர் வன்முறை தற்போது பக்கத்தில் மாநிலத்துக்கு பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் அருகில் உள்ள மிசோரம் மாநிலத்தில், இருந்து இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெய்தி சமூக மக்கள் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், மிசோரமில் வசிக்கும் மெய்தி மக்கள் மிசோரமில் இருந்து வெளியேற வேண்டும், அல்லது அவர்களுக்கு எதிராக ஏதேனும் வன்முறை நடந்தால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று PAMRA என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கு பதிலடியாக அசாமில் இருக்கும் மிசோ சங்கும் மக்கள் அங்கிருந்து விரைவில் காலி செய்யுமாறு அசாம் சங்கம் ஒன்று அறிக்கை விட்டு பின்னர் அதனை திரும்ப பெற்றது.

இவ்வாறு வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவின் இன ரீதியான பாகுபாடு காரணமாக தங்களுக்குள் பிரிந்து கிடப்பதை அரசியல் விமர்சகர்கள் பலர் விமர்சித்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் பல ஆண்டுகளாக பிரிவினை குரல் எழுந்துவந்து நிலையில், தற்போதுதான் அது குறைந்துள்ளது. இந்த சூழலில் அங்கு மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "இந்தியாவின் பெயரையே மாற்றவேண்டும்" -எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் அச்சத்தில் உளறும் பாஜக தலைவர்கள் !